
தூத்துக்குடியில் லாரியின் சக்கரத்தில் சிக்கி 7-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்
தூத்துக்குடியில் லாரியின் சக்கரத்தில் சிக்கி 7-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சாலையோர ஆக்கிரமிப்புகளால் தொடரும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை வேண்டும்- பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனி பகுதியை சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியரான பொன்ராஜ், தமிழ்ச்செல்வி தம்பதியரின் மகன் சுனில் காளிதாஸ் (14). இவர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் பயிற்றுவித்த ஆசிரியர் ஒருவர் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கனி பேலஸ் திருமண மண்டபத்திற்கு செல்ல வீட்டிலிருந்து தனது சைக்கிளை எடுத்துள்ளார். அப்போது தாய் தமிழ்ச்செல்வி வெயில் அதிகமாக உள்ளது. அதனால் நான் உன்னை இருசக்கர வாகனத்தில் கூட்டிச் செல்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து தமிழ்ச்செல்வி தனது மகன் சுனில் காளிதாஸ் உடன் இருசக்கர வாகனத்தில் 4-ம கேட் அருகில் செல்லும்போது அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்பு செய்து வரிசையாக கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் தமிழ்ச்செல்வி இருசக்கர வாகனத்தை மறுபுறம் செல்ல முயன்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அங்கு வந்த டிப்பர் லாரியின் சக்கரத்தில் சிறுவன் சுனில் காளிதாஸ் எதிர்பாராத விதமாக விழுந்துள்ளார். இதையடுத்து டிப்பர் லாரியின் சக்கரம் அவர் மீது ஏறி உள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி மாணவன் உயிரிழந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தாய் தமிழ்ச்செல்வி மகனின் உடலை மடியில் வைத்து கதறி, கதறி அழுதார். இதைக் கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள் கண்கள் கலங்கி சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வடபாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் லாரி சக்கரத்தில் சிக்கி ஏழாம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சாலையோரங்களில் காணப்படும் ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் தொடர் விபத்துகளும் அரங்கேறி வருகிறது. இதுத் தொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகளோ, போக்குவரத்து காவல்துறையினரோ கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் வருத்தம் கலந்த குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
மேலும், ஜூன் 10ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இதுபோன்று உயிரிழப்புகள் நடைபெறாமல் தடுக்க சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலைகளில் உள்ள பள்ளங்களை சரி செய்து விபத்து நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.