‘மோடியின் ‘பாஸ்போர்ட்’ தகவல்களை தர முடியாது’
”பிரதமர் நரேந்திர மோடியின், பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் உள்ள தகவல்களை, ஆர்.டி.ஐ., எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்க முடியாது,” என, தலைமை தகவல் ஆணையர் ஆர்.கே.மாத்துார் உத்தரவில் கூறியுள்ளார்.
என்ன பொது நோக்கம்?
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், குஜராத் காங்கிரஸ் நிர்வாகி, ஜி.எம்.சவுகான் தொடர்ந்த வழக்கை விசாரித்த, தலைமை தகவல் ஆணையர், ஆர்.கே.மாத்துார் அளித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
தனிப்பட்ட தகவல்கள் என்பதால், பிரதமர் நரேந்திர மோடியின் பாஸ்போர்ட் தகவல்களை அளிக்க முடியாது. இந்த தகவல்களை பெறுவதில் என்ன பொது நோக்கம் உள்ளது? மேலும், பிரதமர் மோடி குறித்த அனைத்து தகவல்களும், இணையதளங்களிலும், தேர்தல் கமிஷனிலும் உள்ளன; தேவைப்பட்டால், அங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.