
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வளாகத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்நோக்கு பெருந்திட்ட வளாகப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி பல்வேறு பணிகளை இன்று (08.06.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் புதிதாக அமைக்கப்படவுள்ள மினி ஸ்டேடியத்திற்கு இடம் தேர்வு செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். பின்னர் திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.34.65 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையத்தினை பார்வையிட்டு அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து கேட்டறிந்து அங்குள்ள தொழில்நுட்ப இயந்திரங்கள், கணிணிகள் மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகன பயிற்சிகள் வழங்கப்படுவதை பார்வையிட்டார். மேலும் மாணவர்களுடன் குழு எடுத்துக்கொண்டார். புகைப்படம்
அதனைத்தொடர்ந்து திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வளாகத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்நோக்கு பெருந்திட்ட வளாகப் பணிகள் மற்றும் குடிநீர், கழிப்பறை, சுகாதாரம் மற்றும் திருக்கோவில் வளாகத்தில் தூய்மை போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை துரிதமாக முடிக்க அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, அறிவுரைகள் வழங்கினார்.
இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் வட்டாட்சியர் திரு.பாலசுந்தரம், மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் இணை ஆணையர் கார்த்திக, திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் கண்மணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.