போர்க் குற்றங்களை விசாரிக்க இலங்கை அதிபர் மறுப்பு
உள்நாட்டு போர்க் குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்ற ஐ.நா., கோரிக்கையை, இலங்கை அதிபர் சிறிசேனா நிராகரித்துள்ளார்.இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் போது, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனை, சர்வதேச நீதிபதிகளை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என, ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சில், இலங்கை அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இதனை, ஏற்க முடியாது என இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தெரிவித்துள்ளார்.
சிறிசேனா கூறுகையில், ”இலங்கை அரசு எப்படி செயல்பட வேண்டும் என, ஐ.நா., போன்ற அரசு சார்பற்ற அமைப்புகள் கூறும் ஆலோசனைகளை ஏற்க முடியாது. சர்வதேச நீதிபதிகளை கொண்டு இலங்கை ராணுவத்தின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய ஐ.நா., முயற்சித்து வருகிறது. இவர்கள், இலங்கை ராணுவத்தினர் மீது கூறும் குற்றச்சாட்டுகளை கேட்க விருப்பமில்லை,” என்றார்.