பாபர் மசூதி வழக்கை இழுத்தடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்: அத்வானி, கல்யாண் சிங் மீது மீண்டும் விசாரணை
பாபர் மசூதி வழக்கை காலம் தாழ்த்தி வருவதற்கு உச்ச நீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்வானி, கல்யாண் சிங் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை ஏற்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால், அவர்கள் மீண்டும் பாபர் மசூதி வழக்கு விசாரணையை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம் அயோத்தியில் முகாலய மன்னர் பாபர் பெயரில், 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பாபர் மசூதியை இடிக்கத் தூண்டியதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அப்போதைய உத்தரப் பிரதேச மாநில முதல்வர் கல்யாண் சிங்(தற்போது ராஜஸ்தான் மாநில ஆளுநர்) உள்ளிட்ட 20 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில், அன்றைய தினம் மேடையில் இருந்த தலைவர்கள் மீது தனி வழக்கும், கரசேவகர்கள் மீது தனி வழக்கும் என்று இரண்டு வழக்காகப் பிரிக்கப்பட்டு ஒரு வழக்கு உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரேலியிலும், மற்றொரு வழக்கு லக்னோவிலும் நடந்து வந்தது. இதில், ரே பரேலி சிறப்பு நீதிமன்றம் கடந்த 2001-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் விடுதலை செய்யப் பட்டனர். மற்றொரு வழக்கு விசா ரணையில் இருந்து வருகிறது. சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அலகாபாத் உயர் நீதிமன்றமும் கடந்த 2010-ம் ஆண்டு உறுதி செய்தது.
ஒரே வழக்காக விசாரணை
இதை எதிர்த்து சிபிஐ சார்பிலும், ஹாஜி மெஹபூப் அகமது என்பவர் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்படி அத்வானி உள்ளிட்ட தலைவர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ் மற்றும் ஆர்.எப்.நாரிமன் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மீது தொழில்நுட்ப காரணங்களைச் சுட்டிக்காட்டி, குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்திருப்பதை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு நீண்டகாலமாக இழுத்தடிக்கப்படுவதற்கு நீதிபதி கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பிரிக்கப்பட்ட இரண்டு வழக்குகளையும் ஒன்றாக இணைத்து லக்னோ நீதிமன்றத்தில் ஒரே வழக்காக விசாரிக்கலாம் என்றும் சிபிஐ-க்கு அறிவுறுத்தினர்.
மேலும், சிபிஐ சார்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் அனுமதி அளிக்கப் பட்டது. அப்போது அத்வானி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘சிபிஐ தரப்பில் கூடுதலாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய் யப்பட்டால், ஏற்கெனவே விசா ரணை நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ள 183 சாட்சி களை மீண்டும் விசாரணைக்கு அழைத்து சாட்சியங்களைப் பதிவு செய்ய வேண்டியது வரும்’ என்று வாதிட்டார்.
வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 22-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அப்போது அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மீதான விசாரணையை மீண்டும் தொடங்குவது குறித்து இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.