
தூத்துக்குடி மெயின் சாலையில் பலி வாங்க காத்திருக்கும் பாதாள சாக்கடை குழி
தூத்துக்குடியின் பிரதான சாலையான (மதுரை) எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள ஏபிசி மகாலட்சுமி கல்லூரி முன்புறம் உள்ள கமாக் பள்ளிக்கு திரும்பும் மெயின் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை மூடி உடைப்பு ஏற்பட்டு அபாய நிலையில் உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் எச்சரிக்கைக்காக மரக்கிளையை வைத்துள்ளனர்.
இந்த சாலையில் இரவும் பகலுமாக நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. மேலும், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மற்றும் பெற்றோர்கள் அதிகம் இப்பகுதியை பயன்படுத்தி வருகின்றனர், கல்லூரி மற்றும் பின்புறம் உள்ள பள்ளிக்கு இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தினமும் இப்பகுதியை கடந்து செல்கின்றனர்.
இந்நிலையில் மெயின் சாலையில் பாதாள சாக்கடை மூடி உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால், பெரும் விபத்து நடைபெறுவதற்கு முன் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அதை சரி செய்து விபத்து நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.