ஓரிரு நாளில் ஆர்.கே., நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு?
ஆர்.கே., நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக காலியாகவுள்ள இடங்களை நிரப்ப பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த டிச., 5ம் தேதி மறைந்ததையடுத்து சென்னை ஆர்.கே நகர் தொகுதி காலியானது. இது போல் இந்தியா முழுவதும் 12 சட்டமன்ற தொகுதிகளும், 3 பார்லிமெண்ட் தொகுதிகளும் காலியாக உள்ளன.
ஓரிரு நாளில்..
ஒரு தொகுதி காலியாகிவிட்டால் 6 மாத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும், அதன்படி ஆர்.கே., நகர் உள்ளிட்ட நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற மற்றும் பார்லிமெண்ட் தொகுதிகளுக்கு இடைதேர்தல் நடத்த தேர்தல்ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இதற்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என தெரிகிறது. மேலும் இடை தேர்தல்கள் ஏப்., மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும் எனவும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தல்:
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் வரும் ஜுலை மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கான தேர்தலில் இந்தியாவில் உள்ள 776 எம்.பி.,க்களும், 4,120 எம்.எல்.ஏ.,க்களும் ஓட்டு போட தகுதியுடையவராகிறார்கள், இதனால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்காக இடைதேர்தல் பணிகள் அவசர வேகத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளது.