
தூத்துக்குடியில் லாரிகள் மற்றும் கார் அடுத்தடுத்து மோதி விபத்து
தூத்துக்குடி துறைமுகம் செல்லும் நான்கு வழிச்சாலையானது எட்டு வழி சாலையாக விரிவுபடுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக இரு வழிச்சாலை தற்போது ஒரு வழிச்சாலையாக மாற்றப்பட்டு அவ்வழியாக பேருந்துகள், லாரிகள், கனரக வாகனங்கள், திருச்செந்தூருக்கு செல்லும் பக்தர்களின் கார் மற்றும் வேன்கள் அவ்வழியாக சென்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் நாள்தோறும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், நேற்றிரவு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சரக்குகளை இறக்கி விட்டு லாரியை சாயல்குடி ஆத்திகுளம் பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் என்பவரின் மகன் செந்தில்குமார் (32) என்பவர் முடுக்குகாடு பகுதியை தாண்டி லாரியை ஓட்டி வந்துள்ளார். எதிர் திசையில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் கோகிலாபுரத்தை சார்ந்த கணேசன் மகன் தினகரன் (37) என்பவர் டிப்பர் லாரியை ஓட்டி வந்துள்ளார். முடுக்கு காடு பகுதியை நோக்கி டிப்பர் லாரி வந்து கொண்டிருந்த போது டிப்பர் லாரியின் பின்னால் சேலத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த காரை திலீப் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு லாரிகளும் ஒன்றோடு ஒன்றாக வேகமாக மோதுவது போல் வந்துள்ளது. இதை தொடர்ந்து டிப்பர் லாரியை ஓட்டி வந்த தினகரன் என்பவர் சுதாரித்து கொண்டு டிப்பர் லாரியை சென்டர் மீடியன் மேல் ஏற்றியுள்ளார். அப்போது சேலத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கி பின்னால் வந்து கொண்டிருந்த கார் மீதும், டிப்பர் லாரி மீதும் ஈச்சர் லாரி வேகமாக மோதியுள்ளது.
இதில், ஈச்சர் லாரி டிரைவர் செந்தில்குமார் படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த முத்தையா புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த டிரைவர் செந்தில்குமாரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஈச்சர் லாரியை ஓட்டி வந்த செந்தில்குமார் மதுபோதையில் இருந்ததால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதைத்தொடர்ந்து விபத்துக்குள்ளான லாரிகள் மற்றும் கார் அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது.