சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சமஸ்கிருதம்: நிர்மலா சீதாராமன்
”நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், மும்மொழி பயிற்றுவிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும். சமஸ்கிருதத்தை, அதில் சேர்க்கச் சொல்லி, மத்திய அரசிடம் வலியுறுத்துவேன்,” என, மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
சென்னையில் உள்ள சமஸ்கிருத கலலுாரியில், ‘ஆன்லைன்’ வாயிலான, ‘டிஜிட்டல்’ வழி படிப்புகளை அறிமுகம் செய்து வைத்த பின், அவர் பேசியதாவது:சமஸ்கிருதம், டிஜிட்டல் முறையில், கற்பிப்பதற்கு உலகிலேயே சிறந்த மொழி. இன்றளவும், உலகின் பல்வேறு நாடுகளில் பேசப்படும் மொழிகளில், சமஸ்கிருத வார்த்தைகளை அதிக அளவில் காண முடிகிறது. வேத காலத்திய கணித முறையை அறிந்தவர்களுக்கு, இன்றைய கணிதம் ஒரு பொருட்டே அல்ல.
இதன் பாரம்பரியத்தை காக்கும் வகையில், நாடு முழுவதும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், சமஸ்கிருதம் உள்ளிட்ட மும்மொழி பயிற்றுவிப்பு திட்டத்தை அமல்படுத்த, மனித வளத்துறை அமைச்சர் ஜாவடேகரிடம் கோருவேன். மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப, அதை செயல்படுத்த வேண்டும். அதிக மொழிகளை கற்பதால், மாணவர்களின் திறன் உயரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின், அவர் அளித்த பேட்டி:சமஸ்கிருதத்தை மும்மொழி திட்டத்தில் சேர்க்க, கல்லுாரி நிர்வாகிகள் கோரினர். அது ஏற்புடையதே என்பதால், அப்படி சொன்னேன். தமிழக மீனவர் விவகாரத்தில், மத்திய அரசு, நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இலங்கை துாதரிடம் சொல்லி, அவர்கள் நாட்டுடன் பேசியுள்ளோம்.
நெடுவாசல் பிரச்னையில், மாநில அரசின் பங்கும் உள்ளது. அனைத்து தரப்பும் இணைந்து பேசி, மக்கள் நலனை பாதிக்காமல், சுமுக முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.