
பாண்டியாபதி தேர்மாறன் கல்லறை பகுதியை லசால் பள்ளி நிர்வாகம் பயன்படுத்த தடை விதித்து தூத்துக்குடி வட்டாட்சியர் உத்தரவு
கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள் போன்ற சுதந்திர போராட்ட மாவீரர்களோடு இணைந்து ஆங்கிலேயரை எதிர்த்து, இறுதிவரை அடிபணியாமல் வாழ்ந்து மறைந்தவர் தான் மாமன்னர் பாண்டியாபதி தெக்குருஸ் பாரத வர்ம பாண்டியன் (எ) தேர்மாறன் ஆவார். இவர் பரத குல சமுதாய மக்களின் தலைவராகவும், கன்னியாகுமரி முதல் இராமேஸ்வரம் வரை உள்ள கடல் துறைகளின் மன்னராகவும் இருந்தவர்.
மேலும், தூத்துக்குடி புனித பனிமய அன்னைக்கு தங்கத்தில் தேர் செய்து கொடுத்தவர். இவரது கல்லறை தூத்துக்குடி லசால் பள்ளி ஒட்டிய கல்லறை பகுதியில் உள்ளது. பாண்டியாபதி தேர்மாறன் கல்லறை இருக்கும் பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்கத்தில், சமீப காலமாக தூத்துக்குடி லசால் பள்ளி நிர்வாகம் கல்லறைக்கு செல்லும் பாதையை அடைத்து, காங்கிரீட் கட்டுமானங்களை கட்டியது. மேலும் பாண்டியாபதி தேர்மாறன் கல்லறை அவமதிக்கும் நோக்கில் கல்லறை கற்களை திருடி மறைத்து வைப்பதும், கல்லறை மீது கட்டுமான குப்பைகளை போட்டு அவமதிப்பது போன்ற செயல்களை செய்து வந்தது. இதுகுறித்து தகவலறிந்த பரத குல மக்கள் 31/5/2024 அன்று லசால் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து முற்றுகையிட்டனர்.
இந்தநிலையில் காவல்துறை தலையிட்டு கட்டுமானத்தை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர். ஆனாலும் லசால் பள்ளி நிர்வாகம் அத்துமீறி கட்டுமான பணியை செய்தது, அதனால் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டது, கட்டுமானம் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று (13/6/2024) மாலை 5 மணிக்கு தூத்துக்குடி வட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில் சமீபத்தில் திட்டமிட்டு காணாமல் ஆக்கப்பட்ட 3 கல்லறை கற்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும், கல்லறைக்கு வணக்கம் செலுத்த செல்லும் வழியை உடனடியாக உடைத்து திறக்க வேண்டும், கல்லறைக்கு 42 சென்ட் இடத்தை பரத சமுதாயத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதற்கு லசால் பள்ளி நிர்வாக தரப்பில், அவர்கள் தலைமையிடம் கேட்டு சொல்ல, ஒரு மாத அவகாசம் கேட்கப்பட்டது. எனவே அடுத்த கூட்டம் ஜூலை 18 தேதி என அறிவிக்கப்பட்டது. அதுவரை லசால் நிர்வாகம் பாண்டியாபதி தேர்மாறன் கல்லறை பள்ளி பகுதியை பயன்படுத்த தடை விதித்து தூத்துக்குடி வட்டாட்சியர் உத்தரவிட்டார். மேலும் காணாமல் ஆக்கப்பட்ட 3 கல்லறை கற்களை உடனடியாக ஒப்படைக்கவேண்டும் என உத்தரவு இடப்பட்டது.
மேலும் மாநகராட்சி அனுமதியின்றி சட்டத்துக்கு புறம்பாக அந்த இடத்தில் கட்டப்பட்டு கட்டுமானங்களை மாநகராட்சி மூலம் ஆய்வு செய்து உடனடியாக அப்புறப்படுத்த வழிவகை செய்யப்படும் என வட்டாட்சியர் தெரிவித்தார். இதன் அடிப்படையில் தற்காலிகமாக பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டது.