
கிரிக்கெட் விளையாடியதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை வெட்டி படுகொலை செய்த வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை – தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாடியதில் ஏற்பட்ட தகராறு காரணமாக மாரிமுத்து என்ற இளைஞரை வெட்டி படுகொலை செய்த வழக்கில் இளைஞர்களான சுயம்பு லிங்கம் மற்றும் சதீஷ்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற எண் ஒன்று நீதிபதி தாண்டவன் உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சாலையம் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து மற்றும் விளாத்திகுளம் சத்யாநகர் பகுதியைச் சேர்ந்த சுயம்பு லிங்கம் மற்றும் சாலையம் தெரு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோர் நண்பர்கள். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டுக்கு முன்பு இவர்கள் குற்றாலம் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது வேனில் இளைஞர்களிடையே நடனம் ஆடுவது தொடர்பாக மாரிமுத்து மற்றும் சுயம்பு லிங்கம் சதீஷ்குமார் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 20/ 5/ 2018 ஆம் ஆண்டு விளாத்திகுளம் அரசு பள்ளியில் வைத்து நடைபெற்ற ஒரு கிரிக்கெட் போட்டியில் விளையாடும் போது மாரிமுத்து மற்றும் சுயம்புலிங்கம் சதீஷ்குமார் ஆகியோரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது
இதைத் தொடர்ந்து சம்பவத்தன்று இரவு மாரிமுத்துவை வீட்டு அருகே வைத்து சுயம்பு லிங்கம் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் சேர்ந்து மாரிமுத்துவை வெட்டி படுகொலை செய்தனர்.
இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக சுயம்புலிங்கம் மற்றும் சதீஷ்குமார் மீது விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண் ஒன்றில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி தாண்டவன் இன்று சுயம்பு லிங்கம் மற்றும் சதீஷ்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்
இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல் ஆஜரானார்