காணாமல் போன ‘சந்திராயன்’ விண்கலத்தை கண்டுபிடித்தது நாசா
நிலவை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பி, காணாமல் போனதாக கருதப்படும், ‘சந்திராயன்’ விண்கலத்தை, அமெரிக்காவின் நாசா கண்டுபிடித்துள்ளது.
சந்திராயன்:
நிலவை ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான, ‘இஸ்ரோ’ சார்பில், 2008, அக்டோபர், 22ல் அனுப்பப்பட்டது, ‘சந்திராயன்’ விண்கலம். கடந்த, 2009, ஆகஸ்ட், 29 முதல், இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையுடனான அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, காணாமல் போன, ‘சந்திராயன்’ விண்கலத்தை தேடும் பணி நடந்தது; ஆனால் பலனளிக்கவில்லை.
தேடும் பணி:
இந்த நிலையில், அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான, நாசா, நிலவுக்கு தான் அனுப்பி, காணாமல் போன, விண்கலத்தை தேடும் பணியில் ஈடுபட்டது. மிக அதி நவீன ராடார்கள் உதவியுடன், நிலவின் சுற்று வட்டப் பாதையில், 200 கி.மீ., தொலைவில், தங்களுடைய விண்கலம் இருப்பதை நாசா உறுதி செய்தது. அத்துடன், ‘சந்திராயன்’ விண்கலமும், அந்த சுற்று வட்டப் பாதையில் இயங்கி வருவதை நாசா கண்டுபிடித்துள்ளது.
கண்டுபிடிப்பு:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள, நாசாவின் ராடார் பிரிவு இதை கண்டுபிடித்துள்ளது. விண்வெளியில் உள்ள விண்கற்கள் உள்ளிட்டவை குறித்து இந்த, ராடார் பிரிவு ஆய்வு செய்து வருகிறது. அப்போது, நிலவுக்கு அருகில், இந்தியா மற்றும் அமெரிக்காவின் விண்கலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக, அந்த பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்கால ஆராய்ச்சிக்கு உதவி:
‘பூமியின் சுற்றுவட்டப் பாதையில் உள்ள சிறிய ரக பொருட்களை ராடார்கள் உதவியுடன் கண்டுபிடிப்பதே கடினமானது. நிலவுக்கு அருகே சுற்றி வரும் விண்கலத்தை கண்டுபிடிப்பது அதைவிடக் கடினமானதாகும். ‘தற்போது நாங்கள் மேற்கொண்ட புதிய தொழில்நுட்பத்தின் மூலம், வெகு தொலைவில் உள்ள பொருட்களையும் கண்டுபிடிக்க முடியும் என்பது, எதிர்கால ஆராய்ச்சிக்கு மிகப் பெரிய அளவு உதவும்’ என, அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளது.