
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் ஜூலை 15ஆம் தேதி ஆனி வருஷாபிஷேக விழா
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஜூலை 15ஆம் தேதி ஆனி வருஷாபிஷேக விழா நடைபெற உள்ளது.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வருகின்ற 15-07-2024 திங்கட்கிழமை அன்று ஆனி வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெறவுள்ளது.
அந்நாளில் அதிகாலை 4.00 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பபட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5.00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிசேகம், விமான கலசங்களுக்கு கும்பம் புறப்பாடு அதனை தொடர்ந்து அன்று காலை 09-30 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் திருக்கோயில் மேல் தளத்தில் அமைந்துள்ள (தட்டடி) அருள்மிகு மூலவர், வள்ளி, தெய்வானை அம்பாள் ஆகிய சந்நிதிகளின் விமானங்களுக்கு போத்திமார் மூலமும், அருள்மிகு சண்முகர் சந்நிதி விமானத்துக்கு சிவாச்சாரியார் மூலமும், அருள்மிகு வெங்கடாஜலபதி சந்நிதி விமானத்துக்கு பட்டாச்சாரியார் மூலமும் வருஷாபிசேகம் சிறப்பாக நடைபெறவுள்ளது.
மேலும், சாயரட்சை மாலை 4.00 மணி நடைபெறும் அன்று இரவு மூலவருக்கு அபிசேகம் நடைபெறாது. அன்று மாலை 4.00 மணியளவில் அருள்மிகு குமரவிடங்கப்பெருமான் மற்றும் வள்ளி அம்பாள், தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளி திரு வீதி உலா நடைபெறவுள்ளது என கோயில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.