எச்-1பி, எச்4 விசா விவகாரத்தால் விபரீதம் : அமெரிக்காவில் 24 லட்சம் வேலை காலி
இந்தியர்கள் அதிகமாக பயன்படுத்தும் எச்-1பி விசா எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கை எடுத்தது. அமெரிக்க நிறுவனங்கள், தங்களின் தேவைக்காக வேலை தரும் போது, வெளிநாட்டவரை பணியமர்த்தாமல், அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்; இல்லையென்றால் நிதியுதவி, கடனுதவி நிறுத்தப்படும் எனவும் நிபந்தனைகள் டிரம்ப் நிர்வாகம் விதித்தது. அமெரிக்காவில் எச்-1பி விசாவில் பணியாற்றுபவர்களின் மனைவிகள் அல்லது கணவன்கள் சிலர் எச்4 விசாவில் பணியாற்றுகின்றனர். இதற்கு முடிவு கட்டுவதில் டிரம்ப் நிர்வாகம் நீதிமன்ற வழக்கில் மும்முரம் காட்டுகிறது. இதைத் தடுக்க இந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் கூறுகையில், ‘‘ சர்வதேச அரங்கில் அமெரிக்கா போட்டியாளராக இருக்க வேண்டும் என்றால், அதற்கு திறமையான தொழிலாளர்களும் அதிகளவில் தேவைப்படும். இதனால் எச்-1பி விசா விஷயத்தில் தொலை நோக்குடன் அமெரிக்க செயல்பட வேண்டும்’’ என கூறியுள்ளார். அமெரிக்க பொருளாதாரத்திலும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் இந்திய ஐ.டி நிறுவனங்களின் பங்கு மிக முக்கியமானது என ஐ.டி. தொழில் அமைப்பான நாஸ்காம் கூறியுள்ளது. இது குறித்து நாஸ்காம் தலைவர் சந்திரசேகர் கூறியதாவது:
அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை, குறைந்த சம்பளத்துக்கு பணியாற்ற வரும் இந்திய ஐ.டி ஊழியர்கள் பறிக்கிறார்கள் என்ற தவறான கருத்து நிலவுகிறது. அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங், கணிதம் ஆகிய துறைகளில் தகுதியான தொழிலாளர்கள் கிடைக்காததால் அமெரிக்காவில் 24 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது என்பதுதான் உண்மை. 2018ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 34 லட்சமாக உயரும். தகுதியான அமெரிக்கர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்பதெல்லாம் கட்டுக் கதை. திறமையான தொழிலாளர்களை உருவாக்கும் இடம் அமெரிக்க பல்கலைக்கழகங்கள். இங்கு அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங், கணிதம் ஆகிய துறைகளில் படிக்கும் 70 சதவீத மாணவர்கள் வெளிநாட்டினர். அவர்களை வேலைக்கு அமர்த்தவும் இந்த விசா திட்டம் அமெரிக்காவுக்கு அவசியம். இதுதான் உலகறிந்த உண்மை. 2015ம் ஆண்டில் சுமார் 5 லட்சம் வேலைகளுக்கு இந்திய ஐ.டி நிறுவனங்கள்தான் ஆதரவளித்தன. இது ஒவ்வொற ஆண்டும் 10 சதவீதம் அதிகரித்த வருகிறது.
மற்ற துறை வேலை வாய்ப்புகளின் 2 சதவீத வளர்ச்சிதான் உள்ளது. அமெரிக்க கார்பரேட் நிறுவனங்களின் வேலை வாயப்பில் இந்திய ஐ.டி நிறுவனங்களின் பங்களிப்பு மிக அதிகம். இதனால்தான் அமெரிக்காவில் 500 பிரபல கம்பெனிகளில் 75 சதவீத நிறுவனங்கள் திறன்பட செயல்படுவதற்கும், அதிக வேலை வாய்ப்பகளை உருவாக்கவும் முடிகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த உண்மை நிலவரம் அறியாமல் திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அமெரிக்காவை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையை அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தொடங்கியுள்ளது. ஒரே ராக்கெட்டில் 104 செயற்கை கோள்களை இந்தியா ஏவியதை அடுத்து, சீன அரசு பத்திரிக்கையில் வெளியான தலையங்கத்தில், இந்தியாவின் திறமையான தொழில்நுட்ப நிபுணர்களை பயன்படுத்திக் கொள்ள சீனா தவறிவிட்டது என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்திய நிபுணர்களுக்கு சீனா சிவப்பு கம்பளம் விரித்து விட்டால், அமெரிக்கா தன் தலையில் மண்ணை வாரிப் போடும் நிலைதான் ஏற்படும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.