
திருச்செந்தூரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்யும் பணிகள் – மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி தலைமையில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் ஆய்வுக்கூடம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (26.06.2024) சாத்தான்குளம், திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி மற்றும் உடன்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்யும் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, தெரிவித்ததாவது:
தமிழகத்தில் குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு புதிதாக ஆர்.சி.சி. கூரையுடன் கூடிய வீடுகளை கட்டித்தருவதுதான் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். வறுமையை ஒழித்து, கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கத்தினை கருத்திற்கொண்டு வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்ந்த அலுவலர்கள் செயல்பட வேண்டும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் மனுவினை முழுமையாக பரிசீலனை செய்து நேரடி கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பட்டியலின மக்கள், மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள் இதுபோன்ற நிலையில் உள்ள நபர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும்போது உடனடியாக பரிசீலனை செய்து நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு, தகுதி இருக்கும்பட்சத்தில் பயனாளிகள் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்ற நிலையில் உள்ள நபர்கள், மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள நபர்கள் விண்ணப்பித்து தகுதி இருந்தும் ஆவணங்களிலோ அல்லது பட்டா மாறுதலிலோ அல்லது ஏதேனும் வருவாய்த்துறை சான்று உள்ளிட்ட காரணத்தினால் தவிர்க்காமல் மேற்படி திருத்தங்கள் மேற்கொள்ள உரிய வழிவகை செய்து பயனாளிகளாக சேர்க்க வேண்டும்.
மேலும், ஜமாபந்தி, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு மனு அளித்த மனுதாரர்களின் மனுக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இத்திட்டத்தில் தகுதியான எந்தவொரு நபரும் விடுபடக்கூடாது. மேலும் இத்திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் என்னென்ன காரணங்களுக்காக மனுக்கள் ஏற்கப்பட்டது, என்னென்ன காரணங்களுக்காக மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு என்பது குறித்து எழுத்துப்பூர்வமாக சான்றாக வழங்க வேண்டும்.
இத்திட்டத்திற்கு வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்ந்த அலுவலர்கள் முக்கியத்துவம் அளித்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, இ.ஆ.ப தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து ஏரல் வட்டம் தென்திருப்பேரையில் உள்ள கடம்பாகுளம் மிகைநீர் செல்லும் மறுகாலையும், கடம்பாகுளத்தின்கீழ் உள்ள 13 குளங்களுக்கு நீர் செல்லக்கூடிய 8 தலை மதகுகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின்போது செயற்பொறியாளர் (கீழ் தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டம்) வசந்தி, உதவி செயற்பொறியாளர் (கீழ் தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டம்) ஆதிமூலம் ஆகியோர் உடனிருந்தனர்.