
தமிழக அரசின் டாப்செட்கோ நிறுவனத்தின் மூலம் கடன்கள் வழங்கப்படும் – தேவைப்படுவோர் விண்ணப்பிக்கலாம் – தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் பல்வேறு திட்டங்கள் மூலம் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தனிநபர் கடன்
இத்திட்டத்தில் தனிநபருக்கு அதிக பட்சமாக ரூ.15.00 இலட்சம் வரையில், ஆண்டு வட்டி விகிதம் 6% முதல் 8% வரையில் கடன் வழங்கப்படும். கடன் திரும்ப செலுத்தும் காலம் 3 முதல் 8 ஆண்டுகள் ஆகும். இத்திட்டத்தில் சில்லரை வியாபாரம் மற்றும் சிறுதொழில்கள், விவசாயம் சார்ந்த உப தொழில்கள், போக்குவரத்து சம்பந்தப்பட்ட தொழில்கள், கைவினைஞர் மற்றும் மரபுவழி சார்ந்த தொழில்கள், இளம் தொழிற்கல்வி பட்டதாரிகள் சுயதொழில் தொடங்க கடனுதவிகள் வழங்கப்படும்.
பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டம்
இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 5% வட்டி விகிதத்தில் அதிக பட்சமாக ரூ.2.00 இலட்சம் வரையில் கடன் வழங்கப்படும். கடன் திரும்ப செலுத்தும் காலம் 3 முதல் 8 ஆண்டுகள் ஆகும்.
நுண்கடன்
இத்திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு மற்றும் ஆண்கள் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிக பட்சமாக ரூ.1.25 இலட்சம் வரையிலும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15.00 இலட்சம் வரையிலும் மகளிருக்கு ஆண்டுக்கு 4% வட்டி விகித்திலும் ஆண்களுக்கு 5% வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியடைந்திருத்தல் வேண்டும். திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் தரம் (Grading) செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிக பட்சமாக 20 உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கடன் திரும்ப செலுத்தும் காலம 4 ஆண்டுகள் ஆகும்.
கறவை மாட்டுக் கடன்
இத்திட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30,000/- வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.60,000/- வரை ஆண்டுக்கு 6% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும். கடன் திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள்ஆகும்.
நீர்பாசன வசதி அமைக்க மானியத்துடன் கூடிய கடன் திட்டம்
இத்திட்டத்தில் சிறு குறு விவசாயிகள் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து நீர்பாசன வசதி ஏற்படுத்திக் கொள்ள அதிகபட்சம் ரூ.1.00 இலட்சம் வங்கிக்கடன் மற்றும் அதற்கு இணையான 50% அரசு மானியம் ரூ.50,000/-வரை அரசால் வழங்கப்படும்.
தகுதிகள்
கடன்தொகை பெற விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் வகுப்பினராகவும், 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்
சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
சாதிச்சான்றிதழ் நகல், வருமானச்சான்று நகல், இருப்பிடச்சான்று நகல், குடும்ப அட்டை நகல், ஓட்டுநர் உரிமம், ஆதார் நகல், முன்னணியில் உள்ள நிறுவனமொன்றிலிருந்து விலைப்புள்ளி மற்றும் திட்டதொழில் அறிக்கை (ரூபாய் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டிருப்பின்)
விண்ணப்பித்தல்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பப்படிவத்தை கட்டணமின்றி பெற்று, மேற்கூறிய சான்றுகள் மற்றும் ஆவணங்களுடன் தூத்துக்குடி இணை பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்), மத்திய/நகர/தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பித்து ஒப்புகை பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
வெண்மைப்புரட்சி ஏற்படுத்தும் வகையில் கறவை மாடு கொள்முதல் கடன் பெருமளவில் பெறுவதற்கு ஆவின் மேலாளரை அணுகுமாறும், இக்கடன் திட்டத்தில் பயனடைந்து பெருமளவு தொழில் முனைவோர்களாக மாறும் சூழலை ஏற்படுத்தி பொருளாரதாரத்தை மேம்படுத்துமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.