ஐசிசி சேர்மன் சஷாங்க் மனோகர் ராஜிநாமா
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சேர்மன் சஷாங்க் மனோகர் தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தார்.
2 ஆண்டுகாலம் கொண்ட இந்தப் பதவியிலிருந்து 8 மாதங்களிலேயே விலகியுள்ள சஷாங்க் மனோகர், தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜிநாமா செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
59 வயதான சஷாங்க் மனோகர், தனது ராஜிநாமா கடிதத்தை இ-மெயில் மூலம் ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சனுக்கு அனுப்பியுள்ளார். அதில், ’நான் ஐசிசியின் முதல் சுதந்திரமான சேர்மனாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவன்.
என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட முயற்சித்தேன். பல்வேறு விவகாரங்களில் முடிவெடுப்பதில் நியாயமாகவும், நடுநிலையாகவும் செயல்பட முயற்சித்தேன். அந்த நேரங்களில் அனைத்து வாரியங்களின் இயக்குநர்களும் எனக்கு ஆதரவளித்தனர்.
தனிப்பட்ட காரணங்களால் ஐசிசி சேர்மன் பதவியில் என்னால் தொடர இயலவில்லை. அதனால் உடனடியாக எனது பதவியை ராஜிநாமா செய்கிறேன்.
இந்த நேரத்தில் அனைத்து வாரியங்களின் இயக்குநர்கள், ஐசிசி அலுவலர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வரும் காலங்களில் ஐசிசி இன்னும் பெரிய அளவுக்கு உயர வாழ்த்துகள்’ என குறிப்பிட்டுள்ளார்.
ஐசிசி வருவாயில் பெரும்பகுதியை இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் பகிர்ந்து கொள்கின்றன.
இந்த முறையை மாற்றும் வகையில் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் புதிய திருத்தங்கள் மற்றும் நிதிக் கொள்கையை சஷாங்க் மனோகர் கொண்டு வந்தார்.
எனினும் இந்த விவகாரத்தில் வரும் ஏப்ரலில் நடைபெறவுள்ள ஐசிசி கூட்டத்தின்போது இறுதி முடிவு எடுக்கப்படும் என மனோகர் அறிவித்திருந்தார்.
ஆனால் அதை கடுமையாக எதிர்த்து வரும் பிசிசிஐ, இலங்கை, வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய கிரிக்கெட் வாரியங்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.
வரும் ஏப்ரலில் நடைபெறும் ஐசிசி கூட்டத்தின்போது தற்போதுள்ள வருவாய் பகிர்வு முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டுமென்றால் அதற்கு மூன்றில் இரண்டு பங்கு கிரிக்கெட் வாரியங்களின் ஆதரவு தேவை.
ஆனால் தற்போதைய சூழலில் அதற்கான வாய்ப்பில்லை. அதன் காரணமாகவே சஷாங்க் மனோகர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.