
தூத்துக்குடியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 3,50,000- மோசடி செய்தவர் கைது – மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி மற்றும் நல்லநம்பி, மணிகண்டன் ஆகியோரிடம் தூத்துக்குடி கோரம்பள்ளம் மாதவன் நகர் பகுதியைச் சேர்ந்த சேதுராமன் மகன் வீரபாண்டியன் (59) என்பவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி நம்பிக்கை ஏற்படுத்தி மேற்படி தமிழ்ச்செல்வியிடம் ரூபாய் 1,50,000/- பணமும், நல்லகண்ணு என்பவரிடம் ரூபாய் 1,50,000/- பணமும், மணிகண்டன் என்பவரிடம் ரூபாய் 2,00,000/- லட்சம் பணமும் என மொத்தம் ரூபாய் 5 லட்சம் பணத்தை பெற்றுள்ளார்.
இதனையடுத்து கூறியபடி வேலை வாங்கித் தராததால் பணத்தை திருப்பி கொடுக்குமாறு தமிழ்ச்செல்வி, நல்லகண்ணு மற்றும் மணிகண்டன் ஆகியோர் வீரபாண்டியனிடம் கேட்பதற்கு அவர் ஆளுக்கு தலா ரூபாய் 50,000/- ஆயிரம் பணத்தை கொடுத்துவிட்டு மீதி ரூபாய் 3,50,000/- பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்து தான் ஏமாற்றப்பட்டதையறிந்த மேற்படி தமிழ்ச்செல்வி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ராஜு மேற்பார்வையில், மாவட்ட குற்ற பிரிவு ஆய்வாளர் அந்தோணியம்மாள், உதவி ஆய்வாளர் முருகன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம் மற்றும் காவலர் பாலசுப்ரமணியன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு, வீரபாண்டியனை கடந்த 05.07.2024 அன்று கைது செய்து, தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.