பெற்றோரை கொடுமைப்படுத்தும் மகனை வீட்டை விட்டு வெளியேற்றலாம்
வயதான பெற்றோரை கவனிக்காமல், அவர்களை கொடுமைப்படுத்தும் மகனை, வீட்டில் இருந்து வெளியேற்றலாம் என, டில்லி ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.
முதியோர் நலனுக்கான சட்டத்தில், அந்தந்த மாநில அரசு கள் தங்கள் மாநிலத்துக்கு ஏற்ற பிரிவுகளை சேர்த்து கொள்ளலாம். அதன்படி, டில்லி அரசு சட்டத்தில், தன்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய வீட்டில் தங்கியிருந்து, தன்னை கொடுமைப்படுத்தும் மகனை வெளியேற்ற, பெற்றோருக்கு உரிமை உண்டு என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையில், குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி, டில்லியில் போலீஸ் வேலையை இழந்தவர் மற்றும் அவருடைய சகோதரர் மீது, அவர்களுடைய பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர். தங்களை கவனிக்காததுடன், தங்களை கொடுமைப்படுத்தும் மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த கீழ் கோர்ட், அந்த மகன்களை வீட்டை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, அந்த சகோதரர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த டில்லி ஐகோர்ட் அளித்துள்ள தீர்ப்பு:பெற்றோரை கவனிக்காத மகன்கள், அவர்களை உடல் ரீதியாகவோ, வார்த்தைகளாலோ கொடுமைப்படுத்தினால், அந்த மகன்களை வீட்டை விட்டு வெளியேற்ற பெற்றோருக்கு உரிமை உள்ளது.
சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய வீடு என்ற கட்டுப்பாட்டை விலக்கும் வகையில், டில்லி அரசு தகுந்த சட்டதிருத்தத்தை கொண்டு வர வேண்டும்.இவ்வாறு டில்லி ஐகோர்ட் கூறியுள்ளது.