இரட்டை இலை முடக்கத்தால் தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்
அ.தி.மு.க.,வில், ‘சின்னம்’ பிரச்னை எழுந்துள்ளதால், உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போவது உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில், மேயர், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட, 1.50 லட்சம் உள்ளாட்சி பதவிகளை நிரப்ப, 2016 அக்., மாதம் தேர்தல் நடக்க இருந்தது. தி.மு.க., தொடர்ந்த வழக்கால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின், தேர்தலை நடத்த, உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் கமிஷன் முறையீடு செய்தது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட, அரசியல் சூழ்நிலைகளால், தேர்தல் கமிஷன் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால், ‘மே மாதம் தேர்தலை நடத்த வாய்ப்புகள் இல்லை’ என, கோர்ட்டில் கமிஷன் தெரிவித்து உள்ளது.
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகளை பார்த்து, உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்ற மனநிலையில், சசிகலா தரப்பு உள்ளது. அதற்கு வசதியாக, தேர்தல் ஏற்பாடுகளும் ரகசியமாக நடந்து வந்தன.
இந்நிலையில், அ.தி.மு.க.,வின், இரட்டை இலை சின்னத்தை, தலைமை தேர்தல் கமிஷன் முடக்கியுள்ள தால், உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள, சசிகலா தரப்பு தயக்கம் காட்டுகிறது. அதனால், உள்ளாட்சி தேர்தல், அக்., வரை தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.