‘நீட்’ தேர்வுக்கு 11.35 லட்சம் விண்ணப்பம்
‘பிளஸ் 2வுக்கு பின், எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளில் சேர, ‘நீட்’ என்ற தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்’ என, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில், நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.இந்த ஆண்டு, மே, 7ல் நடக்க உள்ள, நீட் தேர்வில் பங்கேற்க, நாடு முழுவதும், 11.35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு, 8.05 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். கடந்த ஆண்டு, 80 நகரங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆண்டு, 23 புதிய நகரங்கள் சேர்க்கப்பட்டு, 2,200 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, நாமக்கல், வேலுார் மற்றும் சேலம் ஆகிய நகரங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.