பள்ளியில் மதிய உணவுக்கு ஆதார்; பிரகாஷ் ஜாவடேகர் விளக்கம்
‛மதிய உணவுத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவே, ஆதார் காட்ட உத்தரவிடப்பட்டது’ என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
பள்ளியில் மதிய உணவு திட்டத்தில் சாப்பிடும் மாணவர்கள் ஆதார் கார்டு அளிக்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
இதுகுறித்து விளக்கமளித்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்ததாவது: பள்ளி மாணவர்கள் மதிய உணவுக்கு ஆதார் கார்டு காண்பிக்க வேண்டும் என்ற உத்தரவு, மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கக்கூடாது என்ற நோக்கத்தில் அல்ல.
மதிய உணவுத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்து, அதில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே மத்திய அரசு செயல்பட்டது.
ஆதார் கார்டு இல்லை என்றால், மாணவர்களுக்கு மதிய உணவு மறுக்கப்படாது. அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு கிடைக்கவும், ஆதார் கார்டு பெற்று தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.