அருந்ததியின மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை தேவை: ஜி.ராமகிருஷ்ணன்
அருந்ததியின மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ”விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஒன்றியம், கே. தொட்டியப்பட்டியில் சாதிய சக்திகளால் அருந்ததியின மக்களுக்குச் சொந்தமான 3 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன, 17 வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
17 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதில் 5 பேர் கடுமையான காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. பாலியல் ரீதியான வார்த்தைகளால் பெண்கள் துன்புறுத்தப்பட்டுள்ளனர். இந்த தீண்டாமை வன்கொடுமை வெறியாட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
தாக்குதலில் ஈடுபட்ட ஆதிக்க வெறியர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்து வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2015-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு இச்சட்டப்படி வழங்கப்பட வேண்டிய நிவாரணத் தொகையை உடனடியாக வழங்குமாறும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
எரிக்கப்பட்ட வீடுகளை முழுமையாக கட்டித் தர வேண்டுமெனவும், சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சைகள் நிவாரணங்கள் வழங்க வேண்டுமெனவும், நிர்க்கதியாக நிற்கும் அருந்ததியின மக்களுக்கு தற்காலிகமாக தங்குவதற்கு இடமும், உணவும், வேலைக்குச் செல்லும் வரையிலும் அவர்களுக்கு நிவாரணமும், பாதுகாப்பும் வழங்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
அந்த ஊரில் ரேஷன் கடை, மயானம், சமுதாயக் கூடம், குடிதண்ணீர் பிடிப்பதில் ஆகியவற்றில் நிலவும் தீண்டாமைக் கொடுமைக்கு உடனடியாக முடிவு கட்டவும் தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும்” என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.