ரயில்களில் தீ எச்சரிக்கை அலாரம் வசதி..!
ஓடும் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டால், அது குறித்து உடனடியாக எச்சரிக்கும் மற்றும் தேவைப்பட்டால் வண்டியை நிறுத்தக் கூடிய வசதி உள்ளிட்ட, தீ எச்சரிக்கை அலாரம் வசதிகள், ராஜ்தானி மற்றும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ரயில்வே உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது: ஓடும் ரயில்களில் தீவிபத்து ஏற்பட்டால் உயிரிழப்பும், பொருள் இழப்பும் ஏற்படுவதை தடுக்கும் வகையில், தற்போது, எச்சரிக்கை செய்யும் அலாரம் வசதி உள்ளது. ஆனால், இது போதுமானதாக இல்லை. அதனால், புதிய நவீன தொழில்நுட்ப வசதிகள் அடங்கிய முறையை அறிமுகம் செய்ய உள்ளோம். அதன்படி, ஒரு ரயிலின் அனைத்து பெட்டிகளிலும், தீ தடுப்பு சாதனங்களும், தீ ஏற்பட்டால் எச்சரிக்கை செய்யும் வசதியும் இடம்பெறும்.
ரயிலுக்கு மின்வசதி அளிக்கும் பெட்டியில், மைய தகவல் மையம் என்ற வசதி ஏற்படுத்தப்படும். இந்த பெட்டியுடன், ரயிலின் அனைத்து பெட்டிகளும் இணைக்கப்படும். ஒரு குறிப்பிட்ட பெட்டியில் ஏற்படும் புகையின் அடிப்படையில், ரயிலின் மைய தகவல் மையத்தில் உள்ள கம்ப்யூட்டர் திரையில் எச்சரிக்கை செய்யப்படும்.
உடனடியாக, புகை வரும் பெட்டியில், உண்மையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய முடியும். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் புகை வந்தால், உடனடியாக அந்தப் பெட்டிக்கு எச்சரிக்கை செய்யப்படும். அதற்கு முன், பிரேக் போடப்பட்டு, வண்டியை நிறுத்தும் தானியங்கி கருவி செயல்படும். தீவிபத்து ஏற்பட்டு, ரயிலில் வேகமாக செல்லும்போது, அது மற்ற பெட்டிகளுக்கும் பரவுவதை, இதன் மூலம் தவிர்க்க முடியும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.