ஜி.எஸ்.டி.,யில் அதிர்ச்சி அளிக்க மாட்டோம்: மத்திய அரசு
ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை அறிமுகம் செய்யும்போது, யாருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்த மாட்டோம்’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் வருவாய் துறை செயலர் ஹன்ஸ்முக் ஆதியா கூறியதாவது: ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறையை, வரும், ஜூலை, 1 முதல் நடைமுறை படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறை வரும்போது, யாருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்த மாட்டோம். தற்போதுள்ள சரக்கு மற்றும் சேவைகளுக்கான வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்களை, உடனடியாக சேர்க்க மாட்டோம்.
உதாரணமாக, கல்வி, மருத்துவம் போன்ற சேவைகள், ஜி.எஸ்.டி., வரி விதிப்பில் கொண்டு வரப்படாது.முதல் ஆண்டில், புதிய வரி விதிப்பு மூலம், எவ்வளவு வசூலாகிறது என்பதை பொறுத்தே, அடுத்தடுத்த ஆண்டுகளில், இதுவரை விலக்கு அளிக்கப்பட்டவர்களும், ஜி.எஸ்.டி., வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்படுவர். அதேபோல், தற்போதுள்ள வரி விகிதங்களை விட அதிக வரியும், புதிய வரி விதிப்பில் விதிக்கப்படாது.
எந்தெந்த பொருட்கள், சேவைகளுக்கு எவ்வளவு வரி விகிதம் விதிப்பது என்பது குறித்து, மத்திய நிதி அமைச்சர் தலைமையிலான, மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.