மகாபலிபுரத்தில் ஜெர்மன் நாட்டு பெண் கற்பழிப்பு: சுற்றுலா பாதிக்கும் அபாயம்
ஜெர்மன் நாட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக, போலீசார் வரைந்துள்ள உத்தேச படம் நேற்று வெளியிடப்பட்டது. மகாபலிபுரத்தில் வெளிநாட்டு பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த சுற்றுலாவை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் கடற்கரையில், ஜெர்மன் நாட்டிலிருந்து சுற்றுலா வந்த, 35 வயது பெண்ணை மூவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக, அப்பெண், மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார்அளித்துள்ளார்.
வெளிநாட்டு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக வெளியான தகவல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூவரை பிடிக்கும் பணியில், போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த பெண் அளித்த தகவலை தொடர்ந்து, குற்றவாளி என கருதப்படும் நபரின் படத்தை போலீசார் நேற்று வரைந்து வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற நேற்று முன்தினத்திலிருந்து, மாவட்ட எஸ்.பி., சந்தோஷ் ஹதிமனி, பல்வேறு கோணங்களில் ஆய்வு நடத்தி வருகிறார். மாமல்லபுரம் டி.எஸ்.பி., எட்வர்ட் தலைமையில், திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர், அனுமந்தன், திருப்போரூர் காவல் ஆய்வாளர், ரமேஷ் மற்றும் மாமல்லபுரம், மானாமதி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மாமல்லபுரம் கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவான, வழிப்பறி மற்றும் இதர குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களின் புகைப்படங்களை, ஜெர்மன் நாட்டு பெண்ணிடம் போலீசார் காண்பித்துஉள்ளனர். போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதால், அடுத்த சில நாட்களுக்குள் குற்றவாளிகளை பிடிக்க முடியும் என, போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.,சந்தோஷ்ஹதிமனியிடம் கேட்டபோது, “குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. இதுகுறித்து பிறகு சொல்கிறேன்,” என்றார்.