‘ஸ்மார்ட் சிட்டி’: ஜூன் மாதம் அடுத்த பட்டியல்!
மத்திய அரசின் கனவு திட்டமான ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் அடுத்த பட்டியல் ஜூன் மாதம் வெளியிடப்படுகிறது. 100 நகரங்களில் 60 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 40 நகரங்கள் இப்பட்டியலில் இடம் பெறும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அரசின் கனவுத் திட்டங்களில் ஒன்றாக, ‘ஸ்மார்ட் சிட்டி’ திகழ்கிறது. இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் நகரங்கள், வளர்ந்த நாடுகளில் உள்ள, அனைத்து வசதிகளும் உடைய, ‘ஹைடெக்’ நகரங்களை போல் மாற்றப்படும்; இதற்காக, பல லட்சம் கோடி ரூபாய் செலவிட, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
‘ஸ்மார்ட் சிட்டி’
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் படி, உலகத் தரம் வாய்ந்த தொழில் நுட்பத்துடன், அனைத்து கட்டமைப்பு வசதிகள் அமைந்த நகரம் உருவாக்கப்படும். இந்த நகர மக்களின் வாழ்க்கைத் தரம், சர்வதேச நகரங்களுடன் ஒப்பிடும் வகையில் இருக்கும். சுத்தமான குடிநீர், தடையற்ற மின்சாரம், பளபளக்கும் சாலைகள், மின்னல் வேக இணைய வசதி, தானியங்கி கழிவு அகற்றல் நடைமுறை, சிறப்பான பொது போக்குவரத்து, ‘டிஜிட்டல்’ மயமான, பொது சேவைகள், குறைந்த விலையில் வீடு ஆகியவை, ஸ்மார்ட் சிட்டியின் கட்டமைப்பு அம்சங்கள்.
தேர்ந்தெடுக்கும் முறை
ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான நகரங்கள், இரு கட்ட நடைமுறை மூலம் தேர்வு செய்யப் படுகின்றன. முதல் கட்டமாக, மாநில அரசுகள், ஸ்மார்ட் சிட்டியாக உருவெடுக்கத்தக்க நகரங்களை தேர்வு செய்து, மத்திய அரசுக்கு பட்டியலை அனுப்பும். அனைத்து மாநிலங் களும் அனுப்பும் பட்டியலில் இடம்பெறும் நகரங்கள், அவற்றின் தற்போதைய கட்டமைப்பு வசதிகளை பொறுத்து, இரண்டாவது கட்டத் தேர்வில் பங்கேற்கும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு, மத்திய அரசு, தன் பங்காக, ஐந்து ஆண்டுகளுக்கு, 48 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கும். தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு நகரத்துக்கும், ஆண்டுக்கு, 100 கோடி ரூபாய் வீதம் செலவிடப்படும். மத்திய அரசு வழங்கும் தொகைக்கு நிகராக, அனைத்து மாநில அரசுகளும் சேர்ந்து முதலீடு செய்யும்.
ஜூனில் 40 நகரங்கள்:
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 100 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன. இதுவரை, 60 நகரங்கள் தேர்வாகி உள்ளன. இந்நிலையில் மீதமுள்ள, 40 நகரங்களுக்கான பட்டியல் ஜூன் மாதம் இறுதியில் வெளியிடப்படவுள்ளது. வரும், 2022க்குள், இந்தியாவில், 100 ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கப்பட்டு இருக்கும்.