வட கொரியா ஏவுகணை சோதனை : அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் கண்டனம்
ஜப்பான் கடல் பகுதியில், வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனையால், தென் கொரியா, ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. வட கொரியாவின் செயலுக்கு, அந்த நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வட கொரியா, தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று, வட கொரியா ராணுவத்தின் சார்பில், ஜப்பான் கடல் பகுதியில் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து, எதிரியின் இலக்கை தாக்கும் வகையிலான ஏவுகணை சோதனையால், அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் அதிச்சி அடைந்து உள்ளன. ஏற்கனவே, ‘வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளை நிறுத்த, சீனா, உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், வட கொரியாவின் நடவடிக்கைகளை தடுக்க, அமெரிக்கா தனிப்பட்ட முறையில் செயல்பட தயங்காது’ என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சீன அதிபர் ஜீ ஜின் பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் இடையிலான பேச்சு நடக்கவிருந்த சில மணி நேரங்களுக்கு முன், வட கொரியா, ஏவுகணை சோதனையை மேற்கொண்டதால், இரு நாடுகளுக்கும் சவால் விடும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுஉள்ளதாக கூறப்படுகிறது. உலக அரங்கில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எச்சரிக்கை : வட கொரியாவின் ஏவுகணை சோதனைக்கு, அமெரிக்காகடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வட கொரியாவிடம் பல முறை பேச்சு நடத்தியும், பல முறை எச்சரித்தும் பலன் இல்லை. அந்த நாட்டின் அடாவடி அத்துமீறல்கள் தொடர்கின்றன. ஏவுகணை பலத்தை காட்டி, எங்களை மிரட்ட முடியாது. மிரட்டல் விடுப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க ஒருபோதும் தயங்கமாட்டோம். வட கொரியாவின் அனைத்து நடவடிக்கைகளையும், அமெரிக்கா கண்காணித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.