Breaking News
இத்தனை வகை டீயா?!

ஒரு கோப்பை தேநீர்

Rose Tea

தண்ணீர் கொதிக்கும்போது அதில் ரோஜா இதழ்களைப் போட்டு, இனிப்புக்காக கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்துக் கொண்டால் ரோஸ் டீ தயார். தேவைப்பட்டால் டீத்தூள் சேர்த்தும் கொதிக்க வைக்கலாம். மலச்சிக்கலைப் போக்குவதற்கும், வயிற்று உப்புசத்தைத் தடுப்பதற்கும் இந்த ரோஸ் டீ பெரிதும் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளவும் ரோஸ் டீ நல்ல சாய்ஸ்.

Oolang Tea

சீனாவில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்த தேநீர் ரத்த சர்க்கரை அளவையும், மன அழுத்தத்துக்கான கார்ட்டிசோல் அளவையும் குறைக்கும் திறன் கொண்டது. Niacin மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் மிகுந்திருப்பதால் எடையையும் விரைவில் குறைக்க முடியும்.

Black Tea

டயட்டைப் பின்பற்றுகிறவர்களின் ஃபேவரைட்டாக எப்போதும் இருப்பது பால் கலக்காத ப்ளாக் டீ. இந்த ப்ளாக் டீயில் சிறிது எலுமிச்சைச்சாறு சேர்த்து குடித்துவந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறுவதுடன் உடலுக்குத் தேவையான எனர்ஜியும் கிடைக்கும். தொடர்ந்து ப்ளாக் டீ சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு 21 சதவீதம் குறைவு என்கிறது ஆய்வு ஒன்று.

Masala Tea

டீ தூள், பால் கலந்த வழக்கமான தேநீரில் மசாலா பொருட்களின் பொடியை சேர்ப்பதுதான் மசாலா டீ. இதற்காக ஏலக்காய், லவங்கம், மிளகு, பட்டை, ஜாதிக்காய், சுக்கு போன்றவற்றைப் பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். டீ தூள் போடும் முன்பு மசாலா பொடியை சேர்த்து தண்ணீரைக் கொதிக்க வைக்க வேண்டும். அதன்பிறகு பால், வெல்லம் போன்றவற்றை வழக்கம்போல் சேர்த்துக் கொள்ளலாம். குளிர்காலங்
களில் அடிக்கடி ஜலதோஷத்துக்கு ஆளாகிறவர்கள் மசாலா டீயைக் குடித்து வந்தால் நல்ல பலனைக் காண்பார்கள். தொண்டை கரகரப்புக்கும் இதமானது மசாலா டீ.

Green Tea

எடை குறைப்பு என்றவுடனே ஞாபகம் வரும் பெருமை கொண்டது க்ரீன் டீ. காலை வேளையில் க்ரீன் டீயைத் தொடர்ந்து குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, உடல் எடை குறையும். இத்துடன் புற்றுநோய் மற்றும் இதயநோயைத் தடுக்கும் வல்லமையும் க்ரீன் டீக்கு உண்டு.

Ginger – Lemon Tea

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கப் பயன்படுகிறது இஞ்சியுடன் எலுமிச்சை கலந்த இந்த தேநீர். பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்புரியும் ஆற்றல் கொண்ட இந்த தேநீரை மற்ற மூலிகைகள் கலந்தும் தயார் செய்யலாம்.

Hibiscus Tea

நான்கு செம்பருத்தி பூக்களின் இதழ்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, அத்துடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து சுவைக்கு வெல்லம் சேர்த்தால் அதுதான் செம்பருத்தி டீ. ரத்தத்தில் இருக்கும் கொழுப்பின் அளவையும், சர்க்கரை அளவையும்குறைக்கும் இந்த செம்பருத்தி டீ.

Aavaram poo Tea

காம்பு நீக்கிய ஆவாரம் பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, வடிகட்டி எலுமிச்சம்சாறு கலந்து அருந்துவதுதான் ஆவாரம் பூ டீ. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் ஆவாரம் பூ தேநீரை சருமம் மினுமினுப்படைய விரும்புகிறவர்களும் பயன்படுத்தலாம்.

Guava leaf Tea

கொய்யாவின் தளிர்களை(இளம் இலைகள்) தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டி அத்துடன் ஏலக்காய், வெல்லம் சேர்த்து பருகுவதற்குப் பெயர்தான் Guava leaf Tea. ரத்தத்தில் சர்க்கரை அளவை மட்டுப்படுத்தவும், வாய்ப்புண், வயிற்றுவலியை குணப்படுத்தவும் இந்த தேநீரை அடிக்கடி பருகலாம்.

Thulsi Tea

துளசி இலையை சிறிது தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டி தேநீராகக் குடித்தால் சளி, இருமல், சுவாசப் பிரச்னைகள் போன்றவை அகலும். சுவாசப்பாதையில் உள்ள தொற்றுகளான வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுகளும் இதனால் எளிதில்
அகலும்.

Corriander Tea

கொத்தமல்லித் தழையை சிறிதளவு தண்ணீரில் கொதிக்க வைத்து அத்துடன் சுக்குத்தூள், வெல்லம் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப் பொருமல், அஜீரணம், மூட்டுவலி, வாய் கசப்பு போன்றவை ஓடிப் போகும். முக்கியமாக, இரவில் இந்த கொத்தமல்லி தேநீரைக் குடித்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

Mint Tea

புதினா இலைகளை தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டி எலுமிச்சம்சாறு, வெல்லம் சேர்த்துப் பருகினால் செரிமானக்கோளாறு, வாயு பிரச்னை அகலும். உடலின் தசைகள் தளர்வடைவதால் நிம்மதியான தூக்கமும் வரும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.