சென்னை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு ஐந்து நாள்கள் விடுமுறை
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை அமைதியாகவும் வன்முறை இல்லாமலும் நடத்த வேண்டும் என்று அனைத்துவிதமான பதுகாப்பு நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. இந்தியாவில், இதுவரை எந்த இடைத்தேர்தலிலும் இல்லாத வீடியோ கான்ஃபரன்சிங் முறையில், இந்தியத் தேர்தல் ஆணையம், மாநிலத்தின் தலைமைச் செயலாளர் தலைமையிலான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது, இதுவே முதல்முறையாகும். அந்த அளவுக்கு தேர்தல் பிரசாரங்களை உன்னிப்பாகக் கவனித்துவருகிறது தேர்தல் ஆணையம். அதோடு, டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் வெளிட்ட அறிகையில், ”ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் காரணமாக, ஏப்ரல் 10-ம் தேதி காலை, 10 மணி முதல் 12-ம் தேதி நள்ளிரவு வரையும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் 15-ம் தேதி அன்றும், சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் அதைச் சார்ந்த பார்கள் அனைத்தும் மூடப்படும். மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, 9-ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும். இந்த உத்தரவை மீறி மது விற்றால், சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவித்துள்ளார். கலெக்டரின் அறிவிப்பின்படி, சென்னையில், ஐந்து நாள்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும்.