கொசுவால் இன்னோர் ஆபத்து
டெங்கு, மலேரியா, ஜிகா வரிசையில் தற்போது Japanese encephalitis என்ற தொற்றுநோய் ஆங்காங்கே பரவிவருகிறது. ‘அது என்ன ஜப்பானீஸ் என்சிபாலிடிஸ்’ என்று பொது நல மருத்துவர் தேவராஜனிடம் கேட்டோம்…‘‘பன்றிகளைக் கடிக்கும் கொசு மனிதனையும் கடிப்பதன் மூலம் பரவுவதுதான் ஜப்பானீஸ் என்சிபாலிட்டிஸ்.
முதன்முதலில் ஜப்பானில் கண்டுபிடித்ததால் இந்த பெயர் வந்தது. உலக சுகாதார மையத்தின் அறிக்கைப்படி ஆசிய நாடுகளில் வருடந்தோறும் 68 ஆயிரம் பேர் ‘ஜப்பானிஸ் என்சிபாலிடிஸ்’ தொற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
‘National vector borne disease programme தகவல்படி, தமிழகத்திலும் 36 பேருக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள்தான் ‘ஜப்பானீஸ் என்சிபாலிடிஸ்’ காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சுகாதாரக் குறைவான இடங்களில் குழந்தைகள் விளையாடும்பொழுது அங்கே மேய்ந்து கொண்டிருக்கும் பன்றிகளைக் கடிக்கும் கொசு, குழந்தைகளையும் கடிப்பதால் இந்த காய்ச்சல் ஏற்படுகிறது.
காய்ச்சலுடன் உடல்வலி, தலைவலி ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழப்பு ஏற்படும். இதன் பக்கவிளைவாக சில குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படும். மிக அரிதாக மரணங்கள் சம்பவிக்கும் அபாயமும் உண்டு. அதனால், வீட்டைச் சுற்றி பன்றிகள் மேயாமலும், தண்ணீர் தேங்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்தலாம்.
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல், சுத்தமான குடிநீர் அருந்துதல், குழந்தைகளை தூய்மையான இடத்தில் விளையாட அனுமதிப்பது போன்ற முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடித்தாலே கொசுக்கள் மூலம் பரவும் இந்த நோயைத் தடுக்கலாம். குழந்தைக்கு ஒரு வயது ஆகும்போதே ‘ஜப்பானீஸ் என்சிபாலிடிஸ்’ தடுப்பூசியை போட்டுக் கொள்வதன் மூலமும் குழந்தைகளைப் பாதுகாக்கலாம்!’’