ஸ்ரீநகர் பாராளுமன்ற இடைத்தேர்தலில் கல்வீச்சு, வன்முறை – துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று பாராளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற்று வரும் ஸ்ரீநகர் தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் கல்வீச்சு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் வெடித்ததால் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் காலியாக உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 11 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர், அனந்த்நாக் ஆகிய 2 பாராளுமன்ற தொகுதிகளில், ஏப்ரல் 9 மற்றும் 12-ந் தேதிகளில் 2 கட்டங்களாக இடைத்தேர்தல் நடைபெறும். வரும் 15-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலை சந்திக்கும் இரு தொகுதிகளிலும் மக்கள் வாக்களிப்பதை தடுக்கும் வகையில் இங்குள்ள பிரிவினைவாதிகள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். தேர்தலை புறக்கணிக்குமாறு வீடுவீடாக சென்று கைப்பிரதிகளை அளித்தும் சிலரை மிரட்டியும் ஜனநாயக முறையிலான தேர்தல் என்னும் மக்களாட்சி முறையை இவர்கள் சீர்குலைக்க முயன்று வருகின்றனர்.
குறிப்பாக, பட்காம் மாவட்டத்துக்குட்பட்ட ஸ்ரீநகர் தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியுமான பரூக் அப்துல்லா போட்டியிடுவதால் அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது.
இந்நிலையில், இந்த தொகுதியில் வாக்குச்சாவடிகளிலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் இரவு இங்கு அமைக்கப்பட்டிருந்த ஒரு வாக்குச்சாவடியை மர்ம நபர்கள் தீயிட்டு எரித்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய காஷ்மீருக்கு உட்பட்ட பட்காம், கன்டேர்பால் மாவட்டங்களில் உள்ள கடைகள், அலுவலகங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்தும் வெகுவாக குறைந்துள்ளதால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.
இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்துக்கு பின்னர் பட்காம் மாவட்டத்தில் உள்ள ஹஃப்ரூ, கூரிப்போரா, டர்ட்போரா, ஹயாட்போரா ஆகிய இடங்களில் வாக்குச்சாவடிக்கு செல்லும் பொதுமக்கள் மீது வன்முறையாளர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதற்கிடையில், கன்டேர்பால் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவின்போது திடீரென்று மின்சாரம் தடைபட்டது. அதை சீர்படுத்த வந்த மின்சாரத்துறை பணியாளர் மீது சில சமூக விரோதிகள் கற்களை வீசி தாக்கினர்.
உள்ளூர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் வன்முறையாளர்களை விரட்டியடிக்க முயன்றபோது அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பான சுழல் நிலவியது. இதனால், பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. காலை 11 மணி நிலவரப்படி 3.3 சதவீதம் வாக்குகளே பதிவாகின.
இந்நிலையில், பட்காம் மாவட்டத்தில் உள்ள பக்கேர்போரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மீது நூற்றுக்கணக்கான வன்முறையாளர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். அவர்களை விரட்டியடிப்பதற்காக எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர்.
இதற்கு கட்டுப்படாத வன்முறையாளர்கள் பாதுகாப்பு படை வீரர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் காயமடைந்தனர். அதில் இருவர் சற்று நேரத்தில் உயிர் இழந்தனர்.’
பலியானவர்களின் பெயர் முஹம்மது அப்பாஸ்(20), பைஸான் அஹமது ராதெர்(15) என தெரியவந்துள்ள நிலையில் நிலைமையை கட்டுப்படுத்த அந்த பகுதிக்கு கூடுதலாக பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.