ரசாயன தாக்குதல் பின்னணியில் சிரியாவே உள்ளது: அமெரிக்கா திட்டவட்டம்
ரசாயன தாக்குதலுக்கு பின்னணியில் சிரியா உள்ளதில் சந்தேகம் இல்லை என்று அமெரிக்கா மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளது.
வாஷிங்டனில் இன்று (புதன்கிழமை) நடத்த செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க ராணுவ தலைமை அதிகாரி ஜிம் மார்டிஸ் கூறும்போது, “சிரியாவில் நடத்தப்பட்ட அபாயகரமான ரசாயனத் தாக்குதலின் பின்னணியில் சிரிய அரசு உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்பாவி மக்கள் மீது ரசாயன தாக்குதலை நடத்தியதற்கான விலையை சிரிய அரசு நிச்சயம் பெறும்.
அதன் ஒரு பகுதியாகவே அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் உத்தரவின்படி அமெரிக்க கடற்படை சிரியா மீது அதிநவீன ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது” என்றார்.
இதற்கிடையில் சிரியா மற்றும் இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளை அழிப்பதே அமெரிக்காவின் முதல் நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த 4-ம் தேதி சிரியாவில் கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள கான் ஷேக்கான் நகர் மீது அரசுப் படை போர் விமானங்கள் ரசாயன தாக்குதலை நடத்தியது. இதில் 11 குழந்தைகள் உட்பட 70 பேர் உயிரிழந்தனர். ஆனால் நாங்கள் ரசாயன குண்டுகளை வீசவில்லை, கிளர்ச்சிக் குழுக்களே இந்த தாக்குதலை நடத்தின என்று சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் மறுத்து வந்தார்.
இந்த ரசாயன வாயு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் உத்தரவின்படி அந்த நாட்டு கடற்படை நேற்று சிரியா மீது அதிநவீன ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.