கமகம இசை விருந்து!- ஆனந்த பைரவி
சங்கடமான சமையலைவிட்டு சங்கீதம் பாடப் போனேன் என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. எளிமையாக அதே சமயம் சத்தாக சமைத்தால் சமைப்பதும் சாப்பிடுவதும் சங்கீதம் போன்றே இனிமையான அனுபவமாக அமையும். அப்படியோர் இசை விருந்து சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த மீனலோசனி பட்டாபிராமன். கொளுத்தும் வெயிலை, சங்கீத சமையலோடு எதிர்கொள்வோம். இசையின் பெயரில் அழைக்கப்படும் உணவு வகைகளை இந்த முறை பார்ப்போம்.
என்னென்ன தேவை?
பிரெட் துண்டுகள் – 6
ரவை, தயிர் – தலா அரை கப்
பீட்ரூட் துருவல், பொடியாக நறுக்கிய குடைமிளகாய்
– தலா ஒரு டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2 டீஸ்பூன்
உப்பு, மிளகுப் பொடி – சுவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
தயிரில் ரவை, உப்பு, பீட்ரூட் துருவல், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, குடைமிளகாய், மிளகுப் பொடி போட்டு நன்றாகக் கலக்குங்கள். இந்தக் கலவையை பிரெட் துண்டின் ஒரு புறம் மட்டும் தடவுங்கள். தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு ரவா கலவை தடவிய பக்கத்தை டோஸ்ட் செய்யுங்கள். மறுபுறமும் திருப்பி எண்ணெய் விட்டு டோஸ்ட் செய்து பரிமாறுங்கள். விரும்பினால் பிரெட் துண்டின் இருபுறமும் இந்தக் கலவை தடவி டோஸ்ட் செய்யலாம். பீட்ரூட்டைச் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் இதை ஆனந்தமாகச் சாப்பிடுவார்கள்.