தமிழக கடல் பகுதிகளில் 45 நாள் மீன்பிடி தடை காலம் நாளை துவக்கம்
தமிழக கடல் பகுதிகளில் 45 நாள் மீன்பிடி தடைகாலம் நாளை துவங்குகிறது. தமிழக கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஏப்ரல், மே மாதங்களில், 45 நாட்கள் விசைப்படகுகளில் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படும். இந்தாண்டு தடைகாலம் நாளை (ஏப். 15) துவங்கி மே 29 வரை அமலில் இருக்கும். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இன்று நள்ளிரவு முதல் கடலுக்கு செல்ல மாட்டார்கள்.நாகை மாவட்டத்தில் 1500 விசைப்படகுகள், 3500 பைபர் படகுகள் கடலுக்கு செல்லாது. இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், லட்சக்கணக்கான மீன்பிடி சார்ந்த தொழிலாளர்கள் ஓய்வில் இருப்பார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் 650 விசைப்படகுகள் கரை நிறுத்தப்படும். இதனால் 3 ஆயிரம் மீனவர்கள் உள்பட சுமார் 10ஆயிரம் தொழிலாளர் வேலையிழந்துள்ளனர்.
இம்மாவட்டத்தில் இன்று கடலுக்கு செல்லும் நாள் இல்லை என்பதால் நேற்றிரவு முதலே தடைகாலம் துவங்கியது. தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் சுமார் 301 விசைப்படகுகள் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் மண்டபம் உள்ளிட்ட பகுதியில் மட்டும் 1,500க்கும் மேற்பட்ட படகுகள் கரை நிறுத்தப்படுகிறது. 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள்.மீன்பிடி தடைகாலத்தால் 13 கடலோர மாவட்டங்களிலும் லட்சக்கணக்கான மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்த 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.விசைப்படகுகள் கரையேற்றப்படுவதால் இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட ஏற்றுமதி ரக மீன்கள் வரத்து முற்றிலும் நின்று போகும்.
இதனால் வெளிநாடுகளுக்கு மீன்கள் ஏற்றுமதி மூலம் நாட்டிற்கு கிடைத்து வந்த பல ஆயிரம் கோடி அந்நிய செலாவணியும் குறைந்துவிடும். மேலும் மீன்கள் விலை பன் மடங்கு உயர வாய்ப்புள்ளது.தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவ சங்க தலைவர் ராஜமாணிக்கம் கூறியதாவது: தடை காலத்திற்கு மீனவர்களுக்கு அரசு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்குகிறது. ஒரு மீனவர் குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு சராசரியாக ரூ. 500 குடும்ப செலவினத்திற்கு தேவைப்படுகிறது. எனவே மீனவ குடும்பம் ஒவ்வொன்றிற்கும் 100 கிலோ அரிசி, ரூ.10 ஆயிரம் உதவித்தொகை அரசு வழங்க வேண்டும். படகு ஒன்றிற்கு மராமத்துச் செலவு 50 ஆயிரம் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை ஆகிறது. இதை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.