அணுகுண்டு மேம்பாடு சோதனை தொடங்கியது அமெரிக்கா
அமெரிக்கா தன்னிடம் உள்ள பி61-12 அணுகுண்டுகளை மேம்படுத்தும் சோதனைகளை, நெவடா பாலைவனப் பகுதியில் தொடங்கியுள்ளது.
அமெரிக்க ராணுவத்தில் பி61-12 என்ற அணுகுண்டு பல ஆண்டுகளுக்கு முன்பே சேர்க்கப்பட்டு விட்டது. இதில் ஆயுளை நீட்டிக்கும் வகையில், இந்த குண்டுகளில் சில மாற்றங்கள் செய்து மேம்படுத்தும் சோதனைகளை அமெரிக்கா தொடங்கியுள்ளது. இலக்கை துல்லியமாக தாக்கும் வகையில் இந்த குண்டுகளின் வால் பகுதி மற்றும் சில ஹார்டுவேர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அணு ஆயுதம் இல்லாத இதன் டம்மி குண்டுகளின் சோதனை அமெரிக்காவின் நெவடா பாலைவனப் பகுதியில் கடந்த மாதம் தொடங்கியது.
நெல்லிஸ் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு சென்ற எப்-16 போர் விமானம், பி61-12 டம்மி குண்டை நெவடா பாலைவனப் பகுதியில் வீசியது. அந்த குண்டு டோனோபா என்ற சோதனை மையத்தில் உள்ள வறண்ட ஏரி பகுதியில் விழுந்து மிகப்பெரிய அளவில் தூசியை கிளப்பியது. இந்த டம்மி குண்டின் பின்பகுதியில் அது பயணம் செய்வற்கான எரிபொருள் மட்டுமே இருக்கும், அதன் முன்பகுதியில் வெடிபொருள் இருக்காது. விமானத்தில் இருந்து குண்டு ஏவப்பட்டவுடன், அது இலக்கை தாக்கும் காட்சிகள் டெலஸ்கோப் மற்றும் தொலைதூர கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன.குண்டு விழுந்த இடத்தில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டது. அதில் புதைந்த டம்மி குண்டு மீட்கப்பட்டு, மீண்டும் ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என அமெரிக்க அணு பாதுகாப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டுகளுக்கும் பி61-12 அணு குண்டு மேம்பாட்டு திட்டம் முடிவடைந்துவிடும். வடகொரியாவின் ஆயுத சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமெரிக்கா, தனது அணு ஆயுத சோதனையை தொடர்ந்து மேம்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.