ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்ய ரிசர்வ் வங்கி விதித்த நிபந்தனை ரத்து
ரூ.5 ஆயிரத்துக்கும் மேல் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு விதித்த நிபந்தனையை ரிசர்வ் வங்கி ரத்து செய்தது.
டெபாசிட் செய்ய நிபந்தனை
கருப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தும் விதமாக கடந்த 19-ந்தேதி ரிசர்வ் வங்கி பல புதிய நிபந்தனைகளை விதித்தது.
பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ந்தேதிக்குள் ரூ.5 ஆயிரத்துக்கும் மேல் ஒருமுறை மட்டுமே வாடிக்கையாளர் டெபாசிட் செய்ய முடியும். அப்போது வங்கி அதிகாரிகள் இருவர் ஏன் இதுவரை பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவில்லை என்று கேள்வி எழுப்புவார்கள். அதற்கு பதில் அளிக்க வேண்டும்.
அதேபோல் ரூ.5 ஆயிரத்துக்கும் குறைவான தொகையை அடுத்தடுத்த நாட்களில் செலுத்தினால் அந்த தொகை ஒட்டு மொத்தமாக ரூ.5 ஆயிரத்துக்கு அதிகமாக இருந்தாலும் அதுபற்றி வங்கி அதிகாரிகள் கேள்வி எழுப்புவார்கள் என்றும் ரிசர்வ் வங்கி நிபந்தனை விதித்தது.
வங்கியில் தங்களைப் பற்றிய தகவல்களை தெரிவிக்கும் விண்ணப்ப படிவத்தை நிரப்பிய வாடிக்கையாளர்களுக்கும்(கே.ஒய்.சி.) இந்த விதிமுறைகள் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது.
உறுதிமொழியை மீறலாமா?
ரிசர்வ் வங்கியின் இந்த புதிய நிபந்தனைகளுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கான அவகாசம் டிசம்பர் 30-ந்தேதி வரை அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பிரதமர் மோடி, நிதி மந்திரி அருண்ஜெட்லி ஆகியோரின் உறுதிமொழியை ரிசர்வ் வங்கி மீறலாமா? என்ற கேள்வியும் எழுந்தது.
இதற்கிடையே ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமான பணத்தை பழைய ரூபாய் நோட்டுகளாக வங்கியில் செலுத்த வந்த ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ், இதுவரை ஏன் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவில்லை என்று வங்கி அதிகாரிகள் கேட்ட கேள்விக்கான பதிலை பதிவு செய்தபோது கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரதமர் அளித்த அவகாசம்
“பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை டெபாசிட் செய்ய வங்கிகளில் தொடர்ந்து கூட்டம் அலை மோதியது. இதனால் கூட்டம் குறையட்டும் என்று காத்திருந்தேன். தவிர, இந்த நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியும், நிதி மந்திரி அருண்ஜெட்லியும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு டிசம்பர் 30-ந்தேதி வரை அவகாசம் தந்து உறுதி மொழி அளித்து இருந்தனர். அவர்கள் மீது இருந்த நம்பிக்கையில் பழைய ரூபாய் நோட்டுகளை இத்தனை நாள் டெபாசிட் செய்யாமல் இருந்தேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த பதில் வேடிக்கையாக இருந்தாலும், வங்கி அதிகாரிகளை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது. மத்திய அரசுக்கும் கடும் நெருக்கடியை உருவாக்கியது.
வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு
பல முக்கிய நகரங்களில் கடந்த 2 நாட்களாக வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாக செலுத்தியவர்கள் இது போல் தங்களுடைய அதிருப்தியை வங்கி அதிகாரிகளிடம் பதிவு செய்தனர்.
குறிப்பாக வங்கியின் கே.ஒய்.சி. வாடிக்கையாளர்கள் ரிசர்வ் வங்கியின் நிபந்தனைக்கு கடும் எதிர்ப்பு தெவித்தனர். இதை உடனடியாக மத்திய அரசின் கவனத்துக்கு வங்கி அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
இதையடுத்து, நேற்றுமுன்தினம் இரவு நிதி மந்திரி அருண் ஜெட்லி “ஒரு முறை டெபாசிட் ஆக ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாக பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தினால் அதுபற்றி வங்கி அதிகாரிகள் கேள்வி எதுவும் எழுப்பி தொந்தரவு தரமாட்டார்கள். இது தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய சுற்றறிக்கையை வெளியிடும்” என்று உறுதி அளித்தார்.
நிபந்தனை ரத்து
இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி கே.ஒய்.சி. வாடிக்கையாளர்கள் தொடர்பான முந்தைய நிபந்தனையை ரத்து செய்து புதிய அறிவிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது.
அதில், “ரிசர்வ் வங்கியின் மறுஆய்வு வழிகாட்டும் நெறிமுறைகளின்படி வங்கியின் முழுமையான கே.ஒய்.சி. வாடிக்கையாளர்கள் ஒரே தடவையில் ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாக பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை டெபாசிட் செய்யலாம். அல்லது பலமுறை இந்த தொகைக்கு அதிகமாகவும் செல்லாத என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை செலுத்தலாம். இப்படி பணம் செலுத்தும்போது வங்கி அதிகாரிகள் வாடிக்கையாளர்களிடம் எந்த கேள்வியும் எழுப்ப மாட்டார்கள்” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.