‘வரதட்சணைக்கு இடமில்லை; பசு மட்டுமே வாங்குவேன்’: மகன் திருமணத்துக்கு லாலு விதிக்கும் நிபந்தனை
தனது மூத்த மகனும், பிஹாரின் சுகாதாரத்துறை அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவின் திருமணத்துக்கு வரதட்சணை பெறப் போவதில்லை என ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் வாக்குறுதி அளித்துள்ளார். அதே சமயம் பெண் வீட்டார் சீதனமாக ஒரு பசுவையாவது வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
லாலு பிரசாத் யாதவ் பசு மீது மிகுந்த பிரியம் கொண்டவர். பாட்னாவில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ வீட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்களைக் காண முடியும். எனினும் பசு வளர்ப்பதில் அவருக்குள்ள தாகம் இதுவரை தணியவில்லை.
இதன் காரணமாக தனது மூத்த மகன் திருமணத்தின்போது வரதட்சணைக்குப் பதிலாக ஒரு பசுவையாவது பெண் வீட்டாரிடம் இருந்து சீதனமாக பெறப் போவதாக தெரிவித்துள்ளார். அவர், ‘‘எனது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவின் திருமணத்தை மிக எளிமையாக நடத்த விரும்புகிறேன். எவ்வித வரதட்சணையும் வாங்கப் போவதில்லை. அதே சமயம் ஒரு பசு அல்லது கன்றுக்குட்டியை பெண் வீட்டார் சீதனமாக வழங்கினால், அதை நான் மறுக்க மாட்டேன். நிச்சயம் பெற்றுக் கொள்வேன். தேஜூக்காக நல்ல குணம், பண்பாடு மிகுந்த பெண்ணைத் தேடி வருகிறோம். நிறைய வரன்கள் தேடி வருகிறது. விரைவில் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுத்து அவருக்கு திருமணம் செய்து வைப்போம்’’ என்றார்.
லாலுவின் மனைவியான ராப்ரி தேவி, ‘‘எனது 7 மகள்களையும் வரதட்சணை கொடுக்காமல் தான் திருமணம் செய்து வைத்தோம். அதே பாணியில் தான் எனது மகனின் திருமணத்தையும் நடத்துவோம்’’ என்கிறார்.
தேஜ் பிரதாப்பும் தனது பெற்றோர் பார்த்து வைக்கும் பெண்ணைத் தான் திருமணம் செய்துகொள்ளப் போவதாக தெரிவிக்கிறார்.
லாலு, ராப்ரி தேவி தம்பதிக்கு 7 பெண்கள், 2 மகன்கள் உள்ளனர். மகன்களில் தேஜ் பிரதாப் மூத்தவர். இளையவரான தேஜஸ்வி பிரசாத் யாதவ் பிஹாரின் துணை முதல்வராக பதவி வகித்து வருகிறார்.