டெல்லியில் 41 நாட்களாக நடந்து வந்த தமிழக விவசாயிகள் போராட்டம் வாபஸ் : மத்திய, மாநில அரசுகளுக்கு 30 நாள் கெடு
தேசிய வங்கிகளில் பெறப்பட்ட விவசாய கடனை ரத்து செய்தல், தென்னக நதிகளை இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடந்த 41 நாளாக போராட்டம் நடத்தி வந்த தமிழக விவசாயிகள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களின் கோரிக்கையை தொடர்ந்து, தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றனர். மேலும், மே 25ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் தங்கள் ேகாரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கெடு விதித்துள்ளனர். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்தல், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, தென்னக நதிகளை இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த 41 நாளாக போராட்டம் நடத்தி வந்தனர். தேசிய தென்னக நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இப்போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வந்தனர்.
தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தும் வகையில், குட்டிக்கரணம் அடித்தல், பிச்சை எடுத்தல், அரை நிர்வாணம், சாட்டையால் அடித்தல் என்று பல்வேறு விதமாக போராட்டம் நடத்தி வந்த அவர்கள் ஒரு கட்டத்தில் நிர்வாணப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆனால், அவர்களை அழைத்து பேச பிரதமர் முன்வராததால், தங்களுடைய பரிதாப நிலையின் உச்சக்கட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் சிறுநீர் குடிக்கும் போராட்டத்தையும் அவர்கள் மேற்கொண்டனர். இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் நாளை முழு வேலை நிறுத்த போராட்டம் நடத்த திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனால் டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள், தற்காலிகமாக தங்கள் போராட்டத்தை ஒத்திவைத்துவிட்டு, தமிழகத்துக்கு வந்து முழு அடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
இதற்கிடையே, நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று காலை 7.30 மணிக்கு ஜந்தர் மந்தருக்கு சென்று விவசாயிகளை நேரில் சந்தித்தார். அப்போது முதல்வர் முன்னிலையில் அய்யாக்கண்ணு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு ஒன்றையும் அளித்தார். தங்களது கோரிக்கைகளை பிரதமரிடம் பேசி நிறைவேற்றி தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கு பதில் அளித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: தேசிய மயக்கமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்வது குறித்து பிரதமரை சந்திக்கும் போது வலியுறுத்துவேன். மத்திய அரசு ஏற்கனவே வழங்கிய வறட்சி நிவாரணத்தொகை ரூ.2,247 கோடியை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, புதிதாக பயிர்க்கடனும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
140 வருடங்களுக்கு பின்பு மிகப்பெரிய அளவில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு எதிர்க்காலத்தில் நிலைமையை சமாளிக்க
நீர்நிலைகளில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளோம்.
மேலும், ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் விரிவுப்படுத்தப்பட உள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கை குறித்து பிரதமரிடம் நேரடியாக வலியுறுத்த உள்ளேன். எனவே, விவசாயிகள் தஙகளது போராட்டத்தை கைவிட்டு ஊர் திரும்ப வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இதையடுத்து, போராட்டத்தை தலைமையேற்று நடத்தி வரும் அய்யாக்கண்ணு, சக விவசாயிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக தெரிவித்தார். விவசாயிகளுடன் அவர் நடத்திய ஆலோசனையை தொடர்ந்து, போராட்டத்தை தற்காலிமாக வாபஸ் பெறுவதாக நேற்று மாலை அய்யாக்கண்ணு அறிவித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘‘முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக தலைவர்களின் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம். மத்திய, மாநில அரசுகள் மே 25ம் தேதிக்குள் எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும். இல்லாவிட்டால், மீண்டும் நாங்கள் ஜந்தர் மந்தரில் போராட்டத்தை பெரிய அளவில் நடத்துவோம்’’ என்றார்.
* விவசாயிகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில், குட்டிகரணம் அடித்தல், பிச்சை எடுத்தல், அரை நிர்வாணம், சாட்டையால் அடித்தல் என்று பல்வேறு விதமாக போராட்டம் நடத்தி வந்த அவர்கள் ஒரு கட்டத்தில் நிர்வாணப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
* மே 25ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் ேகாரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், மீண்டும் ஜந்தர் மந்தரில் தீவிர போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளனர்.