அமெரிக்காவை எதிர்கொள்ள தயார்: வடகொரியா
அமெரிக்காவின் தாக்குதலை எதிர்கொள்ள வடகொரியா தயாராக இருப்பதாக அந்நாடு கூறியுள்ளது.
அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்திவரும் வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா தனது கண்டனத்தை பதிவு செய்து வருகிறது.
அமெரிக்க துணை அதிபர் பென்ஸ, தென்கொரியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டு தலைவர்களுடன் வடகொரியாவின் தொடர் ஆணு ஆயுத சோதனைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் எத்தகைய தாக்குதலையும் எதிர்கொள்ள வடகொரியா தயாராக இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து வடகொரியாவின் அரசு ஊடகமான கேசிஎன்ஏ, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அதிகாரிகள் வடகொரியாவை கோபமடைய செய்யும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அமெரிக்காவின் நடவடிக்கை கொரிய தீபகற்பத்தில் ஆபத்தான கட்டத்தை அடைந்துள்ளது. அமெரிக்காவின் சூழ்ச்சியை வடகொரியா நெருக்கமாக கவனித்து வருகிறது.
வடகொரியா அமைதியை விரும்பும் நாடு, ஆனால் அதன் மீது செலுத்தப்படும் தாக்குதலை சமாளிக்க எதிர் தாக்குதலை நடத்த வடகொரியா தயங்காது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2006 அக்டோபரில் வடகொரியா தனது முதல் அணு ஆயுத சோதனையை நடத்தியது. இதைத்தொடர்ந்து 2009, 2013-ல் அடுத்தடுத்து அணுஆயுத சோதனைகள் நடத்தப்பட்டன. கடந்த 2016 ஜனவரி, 2016 செப்டம்பரில் அதிக சக்திவாய்ந்த அணுஆயுதங்கள் சோதனை செய்யப்பட்டன.
வடகொரியா கடந்த ஆண்டு இறுதியில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியது. மேலும் நீண்ட தொலைவு பாயும் ஏவுகணை சோதனைகளையும் நடத்தியது. அந்த வரிசையில் 6-வது முறையாக அணுஆயுத சோதனை நடத்த வடகொரியா தயாராகி வருகிறது.
வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா. சபையும் உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன. வடகொரியா மீது ஐ.நா.சபை சார்பில் பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தொடர்ந்து வடகொரியா அணுஆயுத சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.