காஷ்மீரில் மீண்டும் பதற்றம் பிரதமருடன் மெகபூபா அவசர ஆலோசனை
மக்கள் ஜனநாயக கட்சி–பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 9–ந் தேதி ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது பெரிய அளவில் வன்முறை வெடித்தது. அதன்பிறகு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து இருக்கின்றன. பாதுகாப்பு படையினர் மீது இளைஞர்கள் கல்வீசி தாக்குவது நீடித்து வருகிறது.
மாணவர்கள் கல்வீச்சு
வன்முறை சம்பவங்கள் காரணமாக காஷ்மீரில் மூடப்பட்டு இருந்த கல்லூரிகள் ஒரு வாரத்துக்கு பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. இதனால் மீண்டும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. ஸ்ரீநகரில் வகுப்புகளை புறக்கணித்து விட்டு வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள், கடந்த 15–ந் தேதி புல்வாமாவில் உள்ள கல்லூரிக்குள் நுழைந்த பாதுகாப்பு படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.
அப்போது போலீசார் மீதும், அந்த வழியாக சென்ற வாகனங்கள் மீதும் அவர்கள் கல்வீசி தாக்கினார்கள். போலீஸ் வாகனம் ஒன்றை அடித்து நொறுக்கினார்கள்.
கண்ணீர்புகை வீச்சு
இதனால் போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் அவர்களை கலைக்க முயன்றனர். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. மாணவர்கள் தொடர்ந்து போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். நிலைமை மிகவும் மோசம் அடைந்ததால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.
கல்வீச்சில் ஒரு போலீஸ்காரர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக 6 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
சுட்டுக்கொலை
இதற்கிடையே, புல்வாமா மாவட்டத்தில் உள்ள பிங்லேனா என்ற இடத்தில் மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் அப்துல் கனி தர் என்பவர் பயங்கரவாதிகள் சிலரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை கொன்றுவிட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதாலும், வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதாலும் காஷ்மீரில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
பிரதமருடன் சந்திப்பு
இந்த நிலையில் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட காஷ்மீர் முதல்–மந்திரி மெகபூபா முப்தி, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து மாநில நிலவரம் குறித்து 20 நிமிடம் அவசர ஆலோசனை நடத்தினார்.
அப்போது காஷ்மீரில் நிலவும் சூழ்நிலைகள் குறித்து பிரதமரிடம் விளக்கிய அவர், மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிதன் அவசியம் பற்றி குறிப்பிட்டார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் மெகபூபா முப்தி நிருபர்களிடம் கூறியதாவது:–
பேச்சுவார்த்தை
காஷ்மீரில் அதிருப்தியில் இருக்கும் இளைஞர்கள் பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் தூண்டி விடப்படுகிறார்கள். கல்வீச்சு, துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெறும் சூழ்நிலையில் பேச்சுவார்த்தை நடைபெறமுடியாது. எனவே இந்த சம்பவங்களுக்கு முதலில் முடிவு கட்டவேண்டும்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானி ஆகியோர் மேற்கொண்ட வழிமுறைகளை பின்பற்றி அனைத்து தரப்பினருடனும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். இல்லையேல் காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த முடியாது; இயல்பு நிலையும் திரும்பாது. (ஹூரியத் அமைப்பினரையும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க செய்ய வேண்டும் என்பதை அவர் இவ்வாறு மறைமுகமாக குறிப்பிட்டார்) வாஜ்பாயின் வழியை பின்பற்றி பிரதமர் மோடி நடப்பார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராஜ்நாத் சிங்
மெகபூபா முப்தி பின்னர் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கையும் சந்தித்து, காஷ்மீர் மாநிலத்தின் சட்டம்–ஒழுங்கு நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார்.
காஷ்மீரில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் குறித்தும், அங்கு தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்து இருப்பது பற்றியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ராஜ்நாத் சிங் நேற்று ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள், துணை ராணுவம் மற்றும் புலனாய்வு பரிவு அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.