ட்ரம்ப்பை வசைபாடிய இந்திய அமெரிக்க நகைச்சுவை நடிகர்
அமெரிக்காவில் ஊடகங்கள் பங்கேற்ற இரவு விருந்து நிகழ்ச்சியில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஹாசன் மின்ஹஜ் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பற்றி தெரிவித்த நகைச்சுவையான கருத்துகள் சமூக ஊடகத்தில் வைரலாக பரவியுள்ளது.
இந்த நிகழ்வுக்கு பிறகு ஹாசன் மின்ஹஜ் கவனிக்கப்படும் நபராக மாறியிருக்கிறார்..
அமெரிக்காவில் கடந்த சனிக்கிழமை வெள்ளை மாளிகையில் ஊடகங்கள் மற்றும் அதிபர் கலந்து கொள்ளும் வருடாந்திர சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. ஆனால் அதிபர் ட்ரம்ப்புக்கும் அமெரிக்க ஊடகங்களுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடு காரணமாக ட்ரம்ப் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. அமெரிக்காவில் 36 வருடங்களுக்குப் பிறகு இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாத அதிபர் என்ற விமர்சனத்தை ட்ரம்ப் மீது பதிந்துள்ளது. இதற்கு முன்னர் 1981-ம் ஆண்டு அமெரிக்காவின் 40-வது அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிகழ்வில் ட்ரம்ப் கலந்து கொள்ளாதது பற்றி ஹசன் மின்ஹஜ் பேசும்போது, யானை அதன் அறையில் இல்லாதபோது நமக்கு பேச வாய்ப்பு கிடைத்துவிட்டது. நிச்சயமாக ட்ரம்ப் பென்சில்வேனியாவில் இருப்பார் என்று நினைக்கிறேன் ஏனெனில் நகைச்சுவைகளை ட்ரம்ப்பால் ஏற்றுக் கொள்ள முடியாது.
தற்போது ட்ரம்ப் மீதும், ட்ரம்ப் நிர்வாகத்தின் மீதும் ஏராளமான மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் அதற்காக அவர்கள் மீது நீங்கள் குற்றம் சொல்வீர்களா? எனக்கு சிஎன்என் செய்தியை பார்க்கும் போதெல்லாம் ட்ரம்ப் மூலம் எனக்கு துப்பறியும் வேலை கிடைத்து வருகிறது.
ஒருவேளை ட்ரம்ப் ரஷ்யாவின் உளவாளியா?. அதை, நீங்கள்தான் கூற வேண்டும். மேலும் சிஎன்என் செய்திகளை பார்க்கும் போதெல்லாம் ட்ரம்ப் என்ன கூற வருகிறார் என்பதை புரிந்து கொள்ளவே எனக்கு சில மணி நேரங்கள் தேவைப்படும். ஒருவழியாக புரிந்து கொண்டுவிட்டு அந்த வார்த்தைகளை காற்றில் விட்டுவிடுவேன்.
ட்ரம்பின் ட்விட்டர் பதிவுகள் குறித்து கூறும்போது, யார் அதிகாலை மூன்று மணிக்கு ட்வீட் செய்வார்கள்? (சிறிது இடைவேளைவிட்டு……..) நிச்சயமாக நமது அதிபர் ட்ரம்ப்தான். ஏனெனில் ரஷ்யாவுக்கு அப்போதுதான் பகல் 10 மணி. அவை வர்த்தக நேரங்கள்” என்றார்.
பத்திரிகைகள் தன்னை பற்றி பொய் செய்திகளை வெளியிடுகின்றன என்று ட்ரம்ப் கூறிய குற்றச்சாட்டு பற்றி பேசிய ஹசன் மின்ஹஜ், “ட்ரம்ப்பிடம் பத்திரிகையாளர்கள் கவனமாக இருக்கவேண்டும். நீங்கள் ஒரு தவறும் செய்யக் கூடாது. உங்களில் ஒருவர் குழப்பத்தினால் தவறு செய்யும்போது அவர் உங்கள் மொத்த குழுவின் மீது குற்றம் சுமத்துவார். அப்போது நீங்கள் உணர்வீர்கள் இங்குள்ள சிறுபான்மை மக்களது உணர்வை.
அமெரிக்காவில் மட்டும்தான் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்கா வாழ் முஸ்லீம் குழந்தை ஒன்று அதிபரை மேடை ஏறி கிண்டல் செய்ய முடியும். இது மிகச் சிறந்த கலாச்சாரம். உலக நாடுகளுக்கு இது ஒரு எடுத்துகாட்டு” என்றார்.
யார் இந்த ஹசன் மின்ஹஜ்?
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்கா வாழ் முஸ்லீமான ஹசன் மின்ஹஜ் அமெரிக்காவில் ’தி டெய்லி ஷோ’ என்ற நிகழ்ச்சியில் பணி செய்து வருகிறார்.
ட்ரம்ப்பைப் பற்றி வெளிப்படையாக தனது நகைச்சுவையின் மூலம் விமர்சித்த ஹசன் மின்ஹஜ்ஜுக்கு சமூக ஊடகங்களின் வாயிலாக பல்வேறு பிரபலங்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.