Breaking News
சின்னத்துக்கு லஞ்சம்: தினகரன் மீது அமலாக்கப் பிரிவு வழக்கு

இரட்டை இலை சின்னத்தை கையகப்படுத்த லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மீது அமலாக்கப்பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அமலாக்கப்பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.

சின்னத்துக்கு லஞ்சம் வழங்கிய விவகாரத்தில் டெல்லி போலீஸார் பதிவு செய்த எஃப்.ஐ.ஆரின் அடிப்படையாகக் கொண்டு வழக்கு பதிவு செய்துள்ளதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினகரன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக தகுந்த ஆய்வு மேற்கொண்ட பின்னர் அவருக்கு சம்மன் அனுப்பப்படும் எனவும் அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது.

டிடிவி தினகரன் வருகிற 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அமலாக்கப் பிரிவும் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

பின்னணி:

அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசிய தாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி, டெல்லியில் ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை கடந்த மாதம் 16-ம் தேதி கைது செய்தனர்.

முன்பணமாக கொடுக்கப்பட்ட ரூ.10 கோடியில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை சுகேஷிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.

சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து டிடிவி தினகரனையும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் கடந்த 25-ம் தேதி டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

தற்போது இருவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அமலாக்கப்பிரிவும் வழக்கு பதிவு செய்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.