வேகமாக வறண்டு வரும் ஏரிகள் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?
சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளும் வேகமாக வறண்டு வருகின்றன.
செங்குன்றம்,
சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளும் வேகமாக வறண்டு வருகின்றன. எனவே குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்து உள்ளனர்.
புழல் ஏரி
சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மிக முக்கியமானது புழல் ஏரி. இதன் மொத்த கொள்ளளவு 330 கோடி கன அடி. தற்போது பருவமழை பொய்த்ததாலும், கடுமையான வெயில் காரணமாகவும் ஏரியில் உள்ள தண்ணீர் விரைவாக வற்றி வருகிறது.
தற்போது இந்த ஏரியில் 44 கோடி கன அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.
வறண்டது
சோழவரம் ஏரியில் இருப்பு இருக்கும்போது புழல் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படும். சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 88 கோடி கன அடி. தற்போது இந்த ஏரி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. இதனால் இந்த ஏரி பாலைவனம் போல காட்சி அளிக்கிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 365 கோடி கன அடி. தற்போது அங்கு 30 கோடி கன அடி மட்டுமே இருப்பு இருக்கிறது.
மாசு அடையும் தண்ணீர்
புழல் ஏரி வேகமாக வறண்டு வரும் நிலையில் அதன் கரையோரம் செங்குன்றம் பேரூராட்சியின் 18 வார்டுகளில் உள்ள குப்பைகளை கொட்டி வருகின்றனர். மேலும் அந்த குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் அதனுடைய மாசு, ஏரி தண்ணீரில் கலந்து வருகிறது.
மேலும் தண்ணீரில் பொதுமக்கள் துணி துவைப்பதாலும், கால்நடைகளை குளிப்பாட்டுவதாலும், செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வாகனங்களை கழுவுவதாலும் தண்ணீர் மாசுப்பட்டு வருகிறது.
பூண்டி ஏரி
கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் பூண்டி ஏரியில் சேமித்து வைக்கப்படும். தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு இங்கிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 8 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை 4 டி.எம்.சி.யும் என மொத்தம் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.
அதன்படி ஜனவரி 9-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆந்திராவில் வறட்சி காரணமாக மார்ச் 22-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. ஜனவரி 21-ந் தேதி முதல் மார்ச் 22-ந் தேதி வரை 2.253 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வரத்து நின்று போனதால் பூண்டி ஏரியில் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதன் எதிரொலியாக பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு கடந்த மாதம் 6-ந் தேதி தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
குடிநீர் தட்டுப்பாடு
பூண்டி ஏரியில் 323 கோடி கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது அங்கு 6 கோடி கன அடி தண்ணீர் மட்டும் தான் இருப்பு உள்ளது. இதனால் பூண்டி ஏரி குட்டை போல் காட்சி அளிக்கிறது.
பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் மொத்தம் 11.05 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று இந்த 4 ஏரிகளில் வெறும் 80 கோடி கன அடி தண்ணீர் மட்டும்தான் இருப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஏரிகளில் தண்ணீர் குறைந்ததால் குடிநீர் வினியோகிக்கும் அளவு குறைக்கப்பட்டதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சென்னை முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளும் கிட்டத்தட்ட வறண்டு வருகின்றன. எனவே சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்து உள்ளனர்.