ஐதராபாத்தில் கால்டாக்சி டிரைவர் வங்கிக்கணக்கில் ரூ.7 கோடி டெபாசிட் அதிர்ச்சியில் உறைந்தது, வருமான வரித்துறை
ஐதராபாத்தில் கால்டாக்சி டிரைவர் வங்கிக்கணக்கில் ரூ.7 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருந்ததைக் கண்டு வருமான வரித்துறை அதிர்ச்சியில் உறைந்தது.
வருமான வரித்துறை அதிர்ச்சி
ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8-ந் தேதி அறிவித்தார். அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து, மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டது.
அந்த நோட்டுகளை பெரிய அளவில் செலுத்தப்பட்டுள்ள வங்கிக்கணக்குகளை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஐதராபாத்தில் ‘உபேர்’ கால்டாக்சி டிரைவர் ஒருவரின், ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத் வங்கிக்கணக்கில் ரூ.7 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கண்டு, வருமான வரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
நவம்பர் 8-ந் தேதிக்கு முன்பு வரை அந்த கால்டாக்சி டிரைவரின் வங்கிக்கணக்கு செயல்படாத கணக்காக இருந்திருப்பது, முக்கிய அம்சம் ஆகும்.
பரிமாற்றம்
இந்த பணம், டெபாசிட் செய்த உடனே பல கட்டங்களாக தங்க வியாபாரி ஒருவருக்கு ஆர்.டி.ஜி.எஸ்., என்னும் நிகழ்நேர பெருந்திரள் தீர்வு முறையில் (ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு உடனடியாக பணத்தை இட மாற்றம் செய்யும் முறை) பல கட்டங்களாக மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த கால்டாக்சி டிரைவரை பிடித்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். ஆனால் அந்தப் பெருந்தொகை எப்படி வந்தது என்பது குறித்து அவரால் விளக்கம் அளிக்க முடியவில்லை.
ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகள்
அந்த வங்கிக்கிளையின் ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வருமான வரித்துறையினர் ஆராய்ந்தனர். அதில் அந்த கால் டாக்சி டிரைவர், கூட்டாளிகள் 2 பேருடன் வங்கிக்கு வந்து அந்த பணத்தை டெபாசிட் செய்தது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து அவர்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். அவர்கள் பணம் டெபாசிட் செய்தது, அதைக் கொண்டு தங்கம் வாங்கி குவித்தது பற்றி தகவல்கள் அளித்தனர். அவர்களது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
வரி செலுத்த ஒப்புதல்
இருப்பினும், அவர்கள் ரூ.7 கோடி டெபாசிட் செய்யப்பட்டதற்கு உரிய வருமான வரி செலுத்துவதாக ஒப்புக்கொண்டனர்.
மத்திய அரசு அறிவித்துள்ள பி.எம்.ஜி.கே.ஒய். என்னும் பிரதம மந்திரி காரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின்கீழ், இந்த தொகைக்கு ரூ.3½ கோடி அபராதம் விதிக்கப்படும். ரூ.1¾ கோடி 4 ஆண்டு வட்டியின்றி மத்திய அரசிடம் முதலீடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.