காவிரி வழக்குகள்- ஜன. 4-க்கு ஒத்தி வைப்பு! தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மீண்டும் உத்தரவு!!
காவிரி தொடர்பான வழக்குகள் ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதுவரை வினாடிக்கு 2000 கன அடி தண்ணீரை தமிழகத்தஇற்கு திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவு தொடரும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் படி, தமிழகத்திற்கு கர்நாடகா, ஜூன், 1 முதல், மே 31 வரை ஓராண்டுக்கு, 192 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும். நடப்பாண்டு, 59.5 டி.எம்.சி., நீர் மட்டுமே வழங்கியுள்ளது. நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, மீதமுள்ள, 115 டி.எம்.சி., நீரை மாதாந்திர அளவுப்படி, கர்நாடகா வழங்கவில்லை.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு, 9ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ‘காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்ய மாநிலங்களுக்கு உரிமை உள்ளது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை, டிசம்பர் 15 முதல் துவங்கும். அதுவரை கர்நாடகா, தமிழகத்திற்கு வினாடிக்கு, 2,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும்’ என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் இந்த உத்தரவை செயல்படுத்த முடியாத அளவுக்கு கர்நாடகாவில் வறட்சி இருப்பதாக கர்நாடக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று காவிரி தொடர்பான வழக்கு விசாரணை வர வேண்டிய நிலையில், வழக்குகள் அனைத்தும் ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பண மதிப்புழப்பு வழக்கை விசாரிப்பதில் காவிரி பெஞ்ச் நீதிபதி முழு வீச்சில் இருப்பதால் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, அதுவரை தமிழகத்திற்கு வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறப்பை தொடர வேண்டும் என்பது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவாகும்.