ஜெயலலிதா சிகிச்சை பெற்ற படங்கள் விரைவில் வெளியிடப்படும் அ.தி.மு.க. (அம்மா அணி) அறிவிப்பு
அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை கைது செய்யப்பட்டதை கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் தினகரன் ஆதரவாளரான கர்நாடக மாநில அ.தி.மு.க. (அம்மா அணி) செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அதில் மர்மம் இருப்பதாக சிலர் கூறி வருகிறார்கள்.
சிகிச்சை பெற்ற படம்
ஜெயலலிதா சிறையில் இருந்த போது 365 தொண்டர்கள் இறந்து விட்டார்கள். அதற்கே பலர் இறந்துள்ளார்கள் என்றால், அவர் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நிலையை கண்டால் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பலர் தங்களின் உயிரை மாய்த்திருப்பார்கள். எனவே தான் அவர் சிகிச்சை பெறுவதை படமாக வெளியிடவில்லை. ஆனால் சிலர் கூடவே இருந்து கொண்டு தற்போது பல்வேறு விசாரணை வேண்டும் என்று கேட்கிறார்கள்.
ஆகவே அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எடுத்த படங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும். அதற்கான அனுமதிக்காக காத்திருக்கிறோம். அந்த படங்கள் வெளியானால் பலரது முகத்திரை கிழியும்.
இவ்வாறு அவர் கூறினார்.