மத்திய அரசிடம் மண்டியிடுகிறார்கள் தமிழக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வெளிப்படைத்தன்மை
தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று இருக்கிறது. அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருள்கள் என்ன என்பது பற்றியோ அல்லது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தோ செய்தி குறிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் விவாதித்து எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த செய்தி குறிப்பை வெளியிடுவது மரபு.
ஆனால் எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல, இவருக்கு முன்பு இருந்த ஓ.பன்னீர்செல்வமும், அதற்கும் முன்பு முதல்-அமைச்சர் பொறுப்பில் இருந்த ஜெயலலிதாவோ இந்த நடைமுறையை கடைப்பிடிப்பதில்லை. ஒரு அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று கருதும் அனைவருமே அமைச்சரவையின் செயல்பாட்டிலும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை.
சுமுக உறவு
எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் முடிவுகளை பத்திரிகைகளுக்கும், ஊடகங்களுக்கும் ‘லீக்’ செய்யப்பட்ட செய்திகள் மூலமாகவே தெரிந்து கொள்ள வேண்டியதிருப்பது மிகவும் வேதனையளிப்பதாக இருக்கிறது.
ஆனாலும் அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு மாநில அரசுடன் இணக்கமாக இருப்பதால் பொதுக்கூட்டங்களில் மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் என்று முதல்-அமைச்சர் தன் அமைச்சரவை சகாக்களைக் கேட்டுக் கொண்டதாக செய்தி வெளியாகியிருக்கிறது. மத்திய அரசுடன் மாநில அரசுக்கு சுமுக உறவு இருப்பதை என்றைக்கும் தி.மு.க. வரவேற்கும்.
தள்ளுபடி
ஆனால் அந்த சுமுக உறவைப் பயன்படுத்தி மத்திய அரசிடம் மாநிலத்திற்கு தேவையான திட்டங்களை பெற்றிருக்கிறதா, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு என்பது தான் முக்கியக்கேள்வி.
மருத்துவர்கள் ஆகும் கனவுகளுடன் இருக்கும் மாணவர்களின் லட்சியத்தை சீர்குலைக்கும் வகையில் மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு கூறி வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் இந்த தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதி விலக்கு அளித்து தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு இணக்கமாக இருக்கும் மத்திய அரசிடமிருந்து ஜனாதிபதியின் ஒப்புதலை ஏன் இதுவரை பெற முடியவில்லை?
இலங்கை பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்களின் 134 படகுகளை இணக்கமான மத்திய அரசு மூலம் வலியுறுத்தி ஏன் சாதிக்க முடியவில்லை? பிரதமருடன், டெல்லியில் போராடிய தமிழக விவசாயிகள் சந்திப்பதற்கு முதல்-அமைச்சர் ஏன் முயற்சி செய்யவில்லை? தமிழகத்தில் அடுத்தடுத்து இந்தி திணிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மத்திய அரசிடம் பண்டிதநேரு கொடுத்த வாக்குறுதியை மீறாதீர்கள் என்று ஏன் கேட்க முடியவில்லை? இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து செம்மொழியாம் தமிழ் மொழியை புறக்கணிக்காதீர்கள் என்று ஏன் இணக்கமான மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க முடியவில்லை? அடுத்தடுத்து தொடரும் விவசாயிகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டே கவலை தெரிவித்தும், இணக்கமான மத்திய அரசை வற்புறுத்தி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை ஏன் தள்ளுபடி செய்ய வைக்க முடியவில்லை?
வருமானவரி சோதனை
ஆகவே, மத்திய அரசை விமர்சிக்காதீர்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் அமைச்சரவை சகாக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக லீக் செய்யப்பட்ட செய்தி மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசின் வருமான வரித்துறை ரெய்டுகள், அமலாக்கப்பரிவு ரெய்டுகள், ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக எதிர்வரும் காலத்தில் சந்திக்க வேண்டிய நடவடிக்கைகள் போன்றவற்றை மனதில் வைத்துதானே தவிர தமிழக மக்களுக்கு உருப்படியான திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அல்ல என்பது தெளிவாக தெரிகிறது.
அதிலும் குறிப்பாக ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்-அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ததற்கான ஆவணப்பட்டியல் இவர்களை மிரட்டுகிறது. அந்த பட்டியல் படியான நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவே மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் சுமூகமான உறவு இருக்கிறது என்றப் போக்கை கடைப்பிடிக்கிறார்கள்.
உண்மை சொரூபம்
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நேரத்தில் முதல்- அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்ட விதத்திற்கும், இப்போது முதல்-அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி செயல்படும் விதத்திற்கும் மத்திய அரசைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் இல்லை.
ஓ.பன்னீர்செல்வத்தை விட நான் அதிகமாகவே மத்திய அரசுக்கு விசுவாசமாக இருக்கிறேன். தமிழக நலன் பற்றி எனக்கு அக்கறையில்லை. ஆகவே 89 கோடி பண பரிவர்த்தனை விவகாரத்தில் மட்டும் நடவடிக்கை எதையும் எடுத்து விடாதீர்கள் என்று மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசிடம் மண்டியிடுவதே அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு லீக் செய்யப்பட்ட செய்தியின் உண்மை சொரூபம் என்பதை இந்தநேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீட் தேர்வு
முதல்-அமைச்சர் மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது உண்மையென்றால் நீட் தேர்வு தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கும் உடனடியாக ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்று கிராமப்புற மருத்துவ மாணவர்கள், நகர்புற ஏழை மாணவர்கள் மற்றும் போராடும் மருத்துவர்கள் ஆகியோரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்த சந்திப்பையும் மத்திய அரசுடன் இருக்கும் சுமுகமான உறவையும் பயன்படுத்தி விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், இணக்கமாக இருக்கிறோம் என்று கூறி சுயநலன்களை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளாமல், மத்திய அரசிடம் நிலுவையில் இருக்கும் காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பல்வேறு தமிழக மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி ஆக்கபூர்வமான முறையில் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.