தி.மு.க. தலைவர் கருணாநிதி பூரண குணமடைந்து வீடு திரும்பினார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் கடந்த 15–ந் தேதி அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தொடர் சிகிச்சையால் அவர் உடல்நலம் தேறினார். இன்னும் ஒரு சில தினங்களில் அவர் வீடு திரும்புவார் என்றும், பின்னர் வீட்டில் ஓய்வு எடுத்து சிறிது நாட்கள் சிகிச்சை பெறுவார் என்றும் கூறப்பட்டது.
புதன் கிழமை காவேரி மருத்துவமனை கருணாநிதி நலம் பெற்று டிவி பார்க்கும் புகைப்படத்தை வெளியிட்டது. காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி உள்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் ஆஸ்பத்திரிக்கு வந்து நலம் விசாரித்தனர். டாக்டர்கள் அளித்த தீவிர சிகிச்சையால் கருணாநிதியின் உடல்நலம் வேகமாக தேறியது. இதைத்தொடர்ந்து அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் பூரண குணமடைந்து மாலை 4.45 மணி அளவில் காவேரி ஆஸ்பத்திரியில் இருந்து கருணாநிதி வீடு திரும்பினார்.
அப்போது அவருடன் செல்வி, துர்கா ஸ்டாலின், கனிமொழி எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன் உள்ளிட்ட குடும்பத்தினரும், முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு ஆகியோரும் உடன் இருந்தனர். பலத்த பாதுகாப்புடன் கருணாநிதி அழைத்து செல்லப்பட்டார். வழி நெடுக அவருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மு.க.ஸ்டாலின், தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் உள்பட முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். கருணாநிதியை வீட்டில் இருந்தபடி ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் கருணாநிதி தலைமையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த 20-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கருணாநிதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதால் கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அறிவித்திருந்தார். இந்தநிலையில் கருணாநிதி பூரண குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து தி.மு.க. பொதுக்குழு கூட்டம் விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.