சரியான சூழ்நிலை அமைகிறபோது வடகொரிய தலைவரை சந்திக்க தயார் டிரம்ப் அதிரடி பேட்டியால் பரபரப்பு
5 முறை அணுகுண்டுகளை வெடித்து சோதித்து, உலக அரங்கை அதிர வைத்துள்ள வடகொரியா அடுத்து 6–வது முறையாக அணுகுண்டு சோதனைக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அது மட்டுமின்றி, ஐ.நா. சட்டதிட்டங்களை மீறி அந்த நாடு தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்த ஏற்ற ‘பேலிஸ்டிக்’ ரக ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது. இந்த அத்துமீறல்கள், அண்டை நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.
வடகொரியா தனது அணு ஆயுத சோதனையை நிறுத்திக்கொள்ளாமல் இனியும் தொடர்ந்தால், ராணுவ நடவடிக்கை எடுக்கும் நிலை உருவாகும் என அமெரிக்கா எச்சரித்து வருகிறது. கொரிய தீபகற்ப பகுதியை நோக்கி தனது காரல் வின்சன் விமானம்தாங்கி போர்க்கப்பல் அணியை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. இதன்காரணமாக அந்த பிராந்தியத்தில் போர்ப்பதற்றம் நிலவி வருகிறது. ஆனால் இரு நாடுகள் இடையேயான பதற்றத்தை தணிப்பதற்காக சமரசம் செய்யுமாறு உலக நாடுகளுக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
சந்திப்பது கவுரவம்
இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ‘புளும்பெர்க்’ செய்தி நிறுவனத்துக்கு நேற்று முன்தினம் சிறப்பு பேட்டி அளித்தார்.
அந்தப் பேட்டியின்போது டிரம்ப், ‘‘வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுடன் சரியான சூழ்நிலையில், நான் சந்திக்க தயாராக இருக்கிறேன். அதை நான் கவுரவமாக கருதுகிறேன்’’ என கூறினார்.
மேலும், ‘‘மீண்டும் சொல்கிறேன். சரியான சூழ்நிலையில்தான் நான் அதை செய்வேன்’’ என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
பரபரப்பு
ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போதே வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை நான் சந்திப்பேன் என்று டிரம்ப் கூறி பரபரப்பை ஏற்படுத்தியது நினைவு கூரத்தகுந்தது.
வடகொரிய தலைவர் ஒருவரை எந்தவொரு அமெரிக்க ஜனாதிபதியும் தனது பதவிக் காலத்தில் சந்தித்தது இல்லை. எனவே வடகொரிய தலைவரை சரியான சூழலில் சந்திக்க தயார் என, இப்போது ஜனாதிபதி டிரம்ப் அறிவித்திருப்பது பரபரப்பை மேலும் அதிகரித்து உள்ளது.
வெள்ளை மாளிகை விளக்கம்
இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் சீன் ஸ்பைசர் கூறியதாவது:–
இருவரும் சந்தித்துப் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் நடக்க வேண்டியது உள்ளது. மிக முக்கியம், சரியான சூழ்நிலைகள் அமைய வேண்டும் என்பதாகும். அதாவது அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ள கொள்கைக்கு உகந்த வகையில்தான், சரியான சூழ்நிலை என்ற வார்த்தையை ஜனாதிபதி உபயோகித்திருப்பார் என நான் நம்புகிறேன்.
வடகொரியாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் உடனடியாக மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அதை நாம் பார்க்க வேண்டும். வடகொரியா தனது ஆத்திரமூட்டும் நடவடிக்கையை தொடர்ந்தால், அமெரிக்க ஜனாதிபதியும், வடகொரிய தலைவரும் சந்திக்கும் சூழ்நிலைகள் உருவாகாது. வடகொரியா தனது அணுசக்தி திறன் முழுவதையும் அகற்ற வேண்டும். அந்த பிராந்தியத்துக்கும், நமக்கும் ஏற்படுத்தி வருகிற அச்சுறுத்தல்களை கைவிட வேண்டும். அப்போதுதான் சந்திப்புக்கு வாய்ப்பு உருவாகும். ஆனால் அந்த சாத்தியம், இப்போது இல்லை. வடகொரியாவின் அச்சுறுத்தலை அமெரிக்க ஜனாதிபதி நன்கு அறிந்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.